நாட்டு நாட்டு.. ஆங்கிலேயரை எதிர்த்த ஆர்ஆர்ஆர் படத்துக்கே ஆஸ்கர்.. திருந்துங்க பாஸ்: ராஜீவ் காந்தி
ஆஸ்கர் விருதை முன்வைத்து பாஜகவை விமர்சித்துள்ளார் திமுகவின் ராஜீவ் காந்தி.
சென்னை: ஆங்கிலேயரை எதிர்த்த ஆர்ஆர்ஆர் படத்துக்குதான் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது; ஆகையால் கலைக்கு மத சாயம் பூசக் கூடாது என திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் இருவரும் விருதை பெற்றுக் கொண்டனர். இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உற்சாகம் ததும்ப ஆராவாரம் செய்தனர். நடிகை தீபிகா படுகோன் நாட்டு நாட்டு பாடல் பற்றி அறிமுகம் செய்தார்.

இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆர்ஆர்ஆர் பட குழுவுக்க் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை பெற்றிருந்தது.
ஆர்ஆர்ஆர் படத்துக்கான ஆஸ்கர் விருது தொடர்பாக திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டு..நாட்டு..பாட்டின் நடனம் படத்தில் வரும் ஆங்கிலேய எதிர்ப்பு தாண்டி அனைவரையும் ஆட வைத்தது!

RRR-படத்தின் இந்துத்துவம் கருத்துகளை பகிர்ந்து பாஜக சங்கிகள் போலி தேசபக்தி பெருமை கொண்டனர்! ஆங்கிலேயரினே எதிர்த்து படம் எடுத்தாலும் விருது கொடுத்து "ஆஸ்கார் விருது குழு" கலைக்கு அரசியல் இல்லை என நிரூபித்து விட்டது. இப்போதாவது சங்கீஸ் கொஞ்சம் திருந்துங்கள் கலைக்கு மதச்சாயம் பூசாதீர்கள்! இவ்வாறு ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications