போதைப்பொருள் வதந்தி.. மிஸ்டர் அண்ணாமலை! பொய்யிலேயே பொழப்பு நடக்குது - திமுக ராஜீவ் காந்தி விமர்சனம்
சென்னை: திமுக கவுன்சிலர்கள் போதைப்பொருள் கடத்தியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவு உண்மையில்லை என கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அறிக்கை வெளியான நிலையில், அவரது பிழைப்பு பொய்யிலேயே உள்ளது என திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் ராஜீவ் காந்தி விமர்சித்து இருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே கீழக்கரை நகராட்சி திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் ஆகியோர் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், கடத்தப்பட்டது போதைப்பொருள் இல்லை எனவும் உரம் என்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கடலோர பாதுகாப்பு குழும அறிக்கை
இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு எண் கொண்ட பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.

வெள்ளை நிற பவுடர்
அவ்வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த (1) சர்பராஸ் நவாஸ் (42/2022) த/பெ. சம்சுதீன் மற்றும் (2) ஜெய்னுதீன் (45/2022) த/பெ. சம்சுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

என்ன பவுடர்?
மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

கடத்தியது உரம்
மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிக அதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச்செயல் சுங்கத்துறை சட்ட மீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அண்ணாமலை கருத்து
நிலைமை இவ்வாறு இருக்க இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "திறனற்ற திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் அதன் புழக்கத்திற்கு திமுகவினரே உதவுவதால் தான். மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு.

ஸ்டாலின் பேசுவாரா?
அடுத்த முறை போதைப் பொருட்களின் ஒழிப்பைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயற்சி செய்தபோது சிக்கிய தன் கட்சிக்காரரைக் குறிப்பிடுவார் என்று நம்புவோம்." என்று பதிவிட்டு உள்ளார்.

ராஜீவ் காந்தி
இதேபோல் தமிழ்நாடு பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யாவும் ட்விட்டரில் விமர்சனம் செய்து இருந்தார். இதனை பாஜகவை சேர்ந்த மாநில விளையாட்டுப்பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியும் பகிர்ந்தார். இந்த நிலையில் கடலோர பாதுகாப்பு குழுமம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி பாஜகவினரை விமர்சித்து உள்ளார் திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி. அண்ணாமலை ட்விட்டர் பதிவையும்,
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அறிக்கையையும் பகிர்ந்த அவர், "மிஸ்டர் அண்ணாமலை. இப்படித்தான் உங்கள் பொழப்பு பொய்யிலையே நடக்குது..." என்று விமர்சித்து உள்ளார்.