ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிப்பு.. மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறிய ஆலங்குளம் தொகுதி
தென்காசி: ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது திமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் சுமார் 38 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றி இருந்தார். அதில் பெரும்பாலும் இம்முறை மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக திரும்பும் என்று பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் மைக்ரோ லெவனில் திட்டமிட்டு வருகிறார். அந்த வகையிலேயே ஆலங்குளம் தொகுதியில் வென்ற மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த போது திமுகவில் சேர்த்து கொள்ளப்பட்டார். அதேபோல் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பாக வென்றிருந்த வைத்திலிங்கம் திமுகவில் சேர்த்து கொள்ளப்பட்டார்.

தேனி மாவட்டத்தில் போடி தொகுதியில் வென்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இம்முறை திமுக சார்பாக போட்டியிடுகிறார். இந்த மூவருக்கும் திமுக சார்பாக சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போடி மற்றும் ஒரத்தநாடு ஆகிய தொகுதியில் மீண்டும் இருவரும் வெல்வதற்கு வாய்ப்புகள் இருந்த சூழலில், ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன் கரை சேருவாரா என்ற கேள்வி எழுந்தது.
நாடார் சமூகத்தின் கணிசமாக வசிக்கும் தொகுதியில் மனோஜ் பாண்டியனுக்கு தனித்த செல்வாக்கும் உள்ளது. இருந்தாலும் ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா இருவருமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது மனோஜ் பாண்டியனுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் 2021 சட்டசபைத் தேர்தலில் பணங்காட்டுப் படை கட்சி சார்பாக களமிறங்கிய ஹரி நாடார் 37,727 வாக்குகளை கைப்பற்றினார்.
ஹரி நாடார் பெற்ற 37,727 வாக்குகளே திமுக வேட்பாளர் பூங்கோதை தோல்விக்கு, மனோஜ் பாண்டியனின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. இந்த முறை ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததால், இருவருமே ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் நாடார் சமூக வாக்குகள் அதிகளவில் பிரியும் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனையில் ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா ஆகிய இருவரும் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரி நாடார் சிறையில் இருந்தவாறு வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது என்றும், ராக்கெட் ராஜாவை முன்மொழிந்தவர் பெயர் வாக்காளர் பட்டியலில் பிழையோடு இருந்ததால வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் உற்சாகம் அடைந்துள்ளார். தவெகவால் வாக்குகள் பிரிந்தாலும், மனோஜ் பாண்டியனுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக நிச்சயம் கரை சேருவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். இதனால் ஆலங்குளம் தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதி என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications