12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நிலையில், அக்கட்சியின் 12 எம்எல்ஏக்களுக்கு இந்த முறை மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என திமுக தலைமை அழுத்தம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கே சீட் கொடுக்கக் கூடாது என திமுகவினர் மல்லுக்கட்டி, தலைமையிடமே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் சொல்லப்படும் என்கிறார்கள். நேற்று கூட தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தியாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனைகளை நடத்தி சில கட்சிகள் இறுதியும் செய்துவிட்டன. திமுக கூட்டணியில் 22 கட்சிகள் இணைந்துள்ளன. அவர்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தன. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிடுமோ என்ற நிலையும் இருந்தது.
ஆனால் ப.சிதம்பரம் தலையிட்ட இந்த கூட்டணியை 28 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா என உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் 18 தொகுதிகளில் வென்றது.
இந்த 18 எம்எல்ஏக்கள் தற்போது மீண்டும் சீட் கேட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவர்களில் 12 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்க கூடாது என திமுக, காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து சில நிர்வாகிகளிடம் ஒன் இந்தியா சார்பில் பேசினோம். அப்போது அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே வாய்க்கா தகராறு இருந்து வந்தது. தலைமை ஒற்றுமையாக இருந்தாலும் நிர்வாகிகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயல்பாடு குறித்து பென் நிறுவனம், திமுக தலைமையின் வியூகக் குழுக்கள், உளவுத் துறை ஆகிய தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட சர்வேயில் அவர்களுக்கு எதிராகவே வந்தது.
மேலும் இவர்களில் சிலர் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால்தான் அவர்களை மாற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.
அந்த வகையில் வேளச்சேரி, சிவகாசி, வைகுண்டம், குளச்சல், காரைக்குடி, சோளிங்கர், விருத்தாசலம், ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, விளவங்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் மீதும் திருப்திகரமான ரிப்போர்ட் கிடைக்கவில்லையாம்.
எனவே இந்த தொகுதிகளில் திமுக வேட்பாளரை களமிறக்க முயற்சி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அதிருப்தி லிஸ்ட்டில் செல்வப்பெருந்தகையின் பெயரும் இருக்கிறது. செல்வப்பெருந்தகைக்கு சீட் கொடுக்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் மன்றாடுகிறார்கள்.
இதை தலைமையிடமும் சொல்லியாகிவிட்டது. எனவே எங்கள் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அந்த திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, திமுக எந்த சர்வேயும் எடுக்கவில்லை. காங்கிரஸில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டாம் என்பதை திமுக எப்படி முடிவு செய்ய முடியும். காங்கிரஸ் தலைமைக்குத்தானே அதிகாரம் இருக்கிறது என்றார்.
முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டுகிறார் என கூறி செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவரது மகள் நிச்சயதார்த்தத்திற்கு நிறைய காங்கிரஸ் நிர்வாகிகள் வரவில்லை, ஆனால் முதல்வர் வருகை தந்தார் என்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் செல்வப்பெருந்தகைக்கு திமுகவிலும் எதிர்ப்பலை வீசுகிறது.












Click it and Unblock the Notifications