திமுக பாஜக கூட்டணிக்கு நோ சான்ஸ்.. பிரிவினை பேசும் அவர்களோடு எங்கள் டிஎன்ஏ ஒட்டாது.. அண்ணாமலை பேட்டி
சென்னை: திமுக பேச்சு பாஜகவின் டிஎன்ஏவுக்கு எதிரானது. பிரிவினை பேசும் திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக கூறினார்.
தமிழகத்தில் பாஜக சார்பில் ஆளும் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பால் வாங்கும் மக்கள் அனைவரும் வீட்டில் எடைகருவி வைத்திருக்க முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில் அரசு பால் பாக்கெட்டை மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். பால் பாக்கெட் எடையில் பிரச்சனை என்றால் அது அரசு மீதான நம்பிக்கையில் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக ஆவின், துறை அமைச்சர், அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

எம்பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு மணிநேரம் 37 நிமிடம் விளக்கம் அளித்தார். விலை உயர்வு, பணவீக்கம், இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் பேசினார். நிதி அமைச்சர் தமிழில் பேசினார். அப்போது திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக அரசின் தேர்தல் அறிக்கை, தமிழக அரசின் செயல்பாடு என அனைத்தையும் கோடிட்டு நிதி அமைச்சர் பேசினார். நிதி அமைச்சர் பேசும்போது தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தது எதற்கு என்பது தெரியாது?. இதற்கு தமிழக எம்பிக்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

கண்ணியம் இல்லை
மத்திய நிதி அமைச்சர் கர்நாடகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தி, கன்னடத்தில் பேசாமல் தாய்தமிழில் பேசினார். நீண்ட நேரம் பேசினார். சபாநாயகரே தமிழில் பேச கூறினார். ஆனால் இங்குள்ள தமிழக எம்பிக்கள் தர்ணா செய்கிறேன் என்ற பேரில் தமிழக மக்களின் நற்பெயருக்கு களங்கம் தான் விளைவித்து உள்ளனர். ஒரு நாடாளுமன்றத்தின் எம்பியாக இருந்தாலும் அதற்கான கண்ணியம், நடத்தை இல்லை.

அனைத்து மனிதனும் சமம் தான்
முரசொலி தலையங்கம் என்பது ஒரு கட்சி நடத்தும் பத்திரிகையின் அங்கம். இந்தியாவை பொறுத்தமட்டில் அனைத்து மனிதனும் சமம் தான். தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பொய் வழக்கு சுமர்த்தப்பட்டாலும் எஸ்ஐடி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தொண்டர்கள் கூச்சல் போடவில்லை. சாலை மறியல் செய்யவில்லை. பஸ்களை எரிக்கவும் இல்லை. ஆனால் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அலுவலகம் வரும்படி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது. கொரோனா பாதிப்பால் புதிய நேரம் கேட்டபோது அமலாக்கப்பிரிவு புதிய நேரம் வழங்கியது. இருப்பினும் எதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். சோனியா காந்தி வீட்டுக்கு சென்று அவரை யாரும் இழுத்து செல்வில்லைல

கருத்து சுதந்திரத்துக்கு பாஜக குரல்
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இரவில் கைது செய்யப்பட்டபோது கருத்து சுதந்திரத்துக்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்திருந்தனர். கருத்து சுதந்திரத்துக்காக பாஜக நிற்கிறது என்பதை திமுக ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். சோனியாகாந்தியை வீட்டுக்கு சென்று குண்டுக்கட்டாக தூக்கிவரவில்லை. முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணைக்கு அமலாக்கப்பிரிவு அழைத்துள்ளது. இது தவறு என்றால் நேற்று மத்திய நிதி அமைச்சர் கொடுத்த விளக்கத்தை கேட்காமல் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தது பற்றி முரசொலி என்ன சொல்கிறது?.

திமுகவுடன் கூட்டணி இல்லை
நம்முடைய கூட்டணி ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளது. தேசியத்தின் பக்கம், நாட்டின் வளர்ச்சிக்கு எந்த கட்சி உள்ளதோ அந்த கட்சியுடன் சேர்ந்து பாஜக பயணித்து கொண்டுள்ளது. இந்திய அளவில் பாஜக பல இடங்களில் பல சூழல்களில் கூட்டணி வைத்துள்ளது. அனைத்து இடங்களின் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தேசம் முதல் என்ற நிலையில் உள்ளனர். தமிழகத்தில் திமுகவின் பேச்சு பாஜகவுக்கு நேர் எதிராக உள்ளது. மாநிலத்துக்கு சுயாட்சி வேண்டும். இதெல்லாம் பாஜகவின் டிஎன்ஏவுக்கு எதிரானது. இதனால் எந்த காலக்கட்டத்திலும் கூட திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தான் எனது கருத்து. இதனை தான் தேசிய தலைமையும் கூறும். ஏனென்றால் பிரிவினை பேசும் கட்சியுடன் எப்படி பாஜக இணைந்திருக்க முடியும்?. இந்தியாவில் இன்று தேர்தல் நடந்தாலும் 370 எம்பிக்கள் பெறுவார்கள் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேசிய தன்மைக்காக தான் பிற கட்சிகளுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி வைத்து தான் கட்சி வளரும் என்பது கிடையாது. நாங்களாகவே வளர்ந்து விடுவோம்.

திமுக சார்ந்தே அரசு இயந்திரம் உள்ளது
நம்மை பொறுத்தவரை ஜூலை 18, நவம்பர் 1 என்று தமிழ்நாட்டு நாளில் திமுக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. காலம்காலமாக நவம்பர் ஒன்றை தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடி வருகிறோம். பெரும்பானலான நவம்பர் ஒன்று தான் தமிழ்நாடு நாளாக உள்ளது. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு இயந்திரம் திமுகவை சார்ந்து தான் செயல்பட்டு வருகிறது. பாஜக சார்பில் திமுக அரசுக்கு எதிராக கொடுத்த புகார்கள் ப்ராசஸில் உள்ளது. ஊழல் தொடர்பாக நாங்கள் புகார் வழங்கி அரசு அதிகாரிகள் விசாரிக்க வாய்ப்பு வழங்கி உள்ளோம். விசாரிக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்.
Recommended Video

பொதுப்பட்டியலில் கல்வி
கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக கட்சி அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அரசின் 2வது பிரேத அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இது வந்த பிறகு கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தை தெரிவிக்க உள்ளோம். கேஎஸ் அழகிரி அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் புத்தகம் அனுப்பி வைக்கிறேன். மாநில பட்டியலில் உள்ள கல்வியை பொதுப்பட்டிலுக்கு காங்கிரஸ் தான் மாற்றியது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வி பற்றி மத்திய அரசு முழுமையாக பேச வேண்டும். இதனை முக அழகிரி அறிந்து வைத்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி என்பது சாதாரண கட்சி அல்ல. பலபேர் உயிர் கொடுத்து வளர்த்த கட்சி. பொதுப்பட்டியலில் கல்வி இருப்பது தெரியாமல் கேஎஸ் அழகிரி பேசுகிறார். இதனால் அரசிலுக்கு உரிய நபராக இருக்கிறாரா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும்''இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications