தவெகவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் கிடைக்கக் கூடாதுனு தொல்லை கொடுத்த திமுக- ஆதவ் அர்ஜுனா
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிடைக்கக் கூடாது என பல தொல்லைகளை திமுக கொடுத்ததாகவும் எனினும் எங்களுக்காக ஆஜராகி வாதாட ஒரு வழக்கறிஞரை போராடி பெற்றதாகவும் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எங்கள் தரப்பு வைத்த மூன்று கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

காவல் துறை சொன்ன இடத்தில்தான் விஜய் பிரச்சாரம் செய்தார். அது போல் விஜய் தாமதமாக வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என கூறுவது தவறான தகவல். கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை போலீஸ் அனுமதி கொடுத்திருந்தது. அந்த நேரத்திற்குள் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தார்.
கரூருக்கு நாங்கள் வந்த போது கரூர் காவல் துறை எங்களை வரவேற்றது. வழக்கத்திற்கு மாறாக வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாதது கரூரில் மட்டும் ஏன் எங்களை காவல் துறை வரவேற்றது? கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட போது காவல் துறை அதிகாரிகள்தான் எங்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறிவிட்டனர். நாங்கள் அப்படியும் எல்லையில் காத்திருந்தோம்.
ஆனால் காவல் துறையினர்தான் "கலவரம் வரும். நீங்கள் கரூருக்கு வரவேண்டாம்" என்றார்கள். அதனால்தான் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோமே தவிர நாங்கள் தப்பியோடவில்லை. சம்பவம் நடந்த முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்களும் மனிதாபிமானமுள்ளவர்கள்தான். இதை திமுக அரசு பயன்படுத்திக் கொண்டது.
இந்த சம்பவத்தை வைத்து ஒரு கட்சியை அழிக்கும் ஜனநாயக படுகொலையை திமுக அரசு செய்து வருகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அது மட்டுமல்ல தவெகவுக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கிடைக்கக் கூடாது என பல்வேறு தொல்லைகளை திமுக அரசு கொடுத்தது.
ஆனாலும் போராடிதான் வழக்கறிஞர்களை பிடித்தோம் என்ற தகவலை ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டு, உச்சநீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்களிடம் பேசி வந்தார் என சொல்லப்பட்டது.
இந்த வழக்கிற்காக வழக்கறிஞர் அரிமா சுந்தரம், கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் தவெக சார்பில் வாதிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை எஸ்ஐடி விசாரிக்க தடைவிதித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications