“ஊரான் வீட்டு நெய்யில.. உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!” தவெகவை தாக்கிய முரசொலி
சென்னை: கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று ஆறுதல் சொல்லி.. அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கியிருந்தார். ஆனால், இந்த பணி ஆணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்திருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் நடவடிக்கையை விமர்சித்து, "ஊரான் வீட்டு நெய்யில.. உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க" என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கரூர் நெரிசல் சம்பவம் என்பது ஒரு விபத்து. அந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் எனில்.. தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து விபத்துகளுக்கும் அரசு வேலை கொடுப்பது சரியாக இருக்குமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

எதிர்த்த கூட்டணி கட்சிகள்
குறிப்பாக தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வர காரணாக இருந்த, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதே சாராம்சத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தன. இருப்பினும் கூட எதையும் பொருட்படுத்தாமல், முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்கியிருந்தார். இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணி நியமன ஆணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது.
ஊரான் வீட்டு நெய்
நிலைமை இப்படி இருக்கையில், முதல்வர் விஜய்யின் செயல்பாடு குறித்து விமர்சித்து முரசொலி தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "'ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க' - என்பது முதலமைச்சர் விஜய்யின் புகழ்பெற்ற பொன்மொழி ஆகும். இதைப் பனையூரில் கல்வெட்டாக அடித்து வைத்து பக்கத்தில் அவர் உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் அவர் செய்திருப்பது என்ன?
மாலை வைக்காமல் ஓடி வந்தவர் தான் விஜய்
தன்னைப் பார்க்க வந்தவர்கள் முட்டி மோதிக் காத்திருப்பதைப் போல ஷூட்டிங் எடுப்பதற்காக... பத்து மணி நேரமாக மக்களைக் காக்க வைத்து, தண்ணீர் தராமல், சோறு போடாமல், பசியாலும் மூச்சுத் திணறலாலும் செத்து விழ வைத்து... 41 உயிர்களைச் சடலம் ஆக்கியவர் தான் இன்று முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் விஜய்.
ஒவ்வொருவராகச் செத்து விழ விழ பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவர்கள் உடலுக்குக் கூட மாலை வைக்காமல் ஓடி வந்தவர் தான் விஜய்.
விஜய்க்கு தெரியாமல் ஓட்டு போட்டு விட்டோம்
ஒரு வாரம் கழித்து வீடியோ பேசினார். ஒரு மாதம் கழித்து அந்தக் குடும்பத்தை எல்லாம் சென்னைக்கு ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து வந்து, தனித்தனி அறையில் உட்கார வைத்து தனித்தனியாகப் போய் அழுதார். பணம் கொடுத்தார். படத்துக்கு மார்க்கெட்டிங் செய்வதைப் போல கட்சிக்கு மார்க்கெட்டிங் செய்தார். படத்தைப் பற்றியே தெரியாமல் டிக்கெட் எடுப்பதைப் போல மக்களும் வோட்டுப் போட்டார்கள். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது, 'நல்லா இல்லை, ஏன் தான் போனோம்னு தெரியலை' என்று சொல்வதைப் போல, 'விஜய்க்கு தெரியாமல் வோட்டு போட்டு விட்டோம்' என்று மக்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
10 ஆவது மாடி: டெல்லியை ஆளலாம்
முதலமைச்சராக வந்து விட்ட விஜய் என்ன செய்கிறார்? தனது டிரஸ் கோட் மாற்றினார். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்கு பேரை மாற்றிக் கொண்டிருக்கிறார். 'உயரமான இடத்தில் உட்கார்ந்தால் இன்னும் உயரலாம். 10 ஆவது மாடியில் தனது அறை இருந்தால் டெல்லியை ஆளலாம்' என்று பதவி பறிபோனவர் சொன்னதை நம்பி தனது அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்து முக்கியமான வேலையை அவர் செய்து வருகிறார். 'ஊரான் வீட்டு நெய்யில் தனது வீட்டுக்கு ஸ்வீட் செய்து' கொண்டிருக்கிறார்.
•கரூர் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவரை தனது ஆட்சியில் உளவுத்துறை அதிகாரியாக நியமித்துக் கொண்டார்.
•உள்துறை தனது கைக்கு வந்ததும், கரூர் வட்டாரத்தில் காவல் அதிகாரிகளாக, அலுவலர்களாக இருந்த 19 பேரை தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். சி.பி.ஐ. விசாரித்து வரும் இந்த வழக்கில் மிகமுக்கியமான சாட்சிகள் இவர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றியது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை.
•மனித உயிர்கள் ஒவ்வொருவராக இறந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தெரிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றவர் அன்றைய அமைச்சர் கரூர் செந்தில்பாலாஜி. அவரை முடக்குவதற்காக, அச்சுறுத்துவதற்காக, மிரட்டு வதற்காக பல்வேறு பொய்வழக்குகளைப் போட்டு வருகிறார் முதலமைச்சர் விஜய். கரூர் தொடர்பான வழக்கில் செந்தில்பாலாஜியையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. எனவே செந்தில்பாலாஜிக்கு விஜய் செய்வது அனைத்தும் பகிரங்க மிரட்டலே ஆகும்.
•அடுத்து 41 குடும்பங்களையும் அமைதிப்படுத்த அனைவருக்கும் அரசு வேலை என்று அறிவித்த விஜய், கரூருக்கே சென்று அந்தக் குடும்பங்களுக்கு அரசாணைகளை வழங்கி இருக்கிறார். 'ஊரான் வீட்டு நெய்யில் தன் வீட்டுக்கு ஸ்வீட்' செய்து கொண்டார். இதைத்தான் இப்போது ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
நங்கு நங்கு என்று கொட்டி இருக்கிறது
''கருணை அடிப்படையில் வேலை கேட்டு பலரும் காத்திருக்கும் போது இவர்களுக்கு மட்டும் எதன் அடிப்படையில் முன்னுரிமை தரப்பட்டது? அரசுப் பேருந்து விபத்துகள், தீ விபத்துகள், சாலை விபத்துக்கள் என தினந்தோறும் நடக்கிறதே? அவர்கள் குடும்பத்தினருக்கும் அரசுப் பணி கேட்டால் என்ன செய்வீர்கள்? அடிக்கடி நடக்கும் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் இறப்பவர் குடும்பமும் அரசுப் பணி கேட்டால் தருவீர்களா? ஏராளமான இளைஞர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கும் போது இவர்களுக்கு மட்டும் எப்படி கொடுப்பீர்கள்?'' என்று கேட்டுள்ளது உயர்நீதிமன்றம். விஜய் பாணியில் சொல்வதாக இருந்தால், 'நங்கு நங்கு என்று கொட்டி இருக்கிறது' உயர்நீதிமன்றம்.
விஜய் ஆட்சிக்கு சம்மட்டி அடி
இறந்தவர் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு அரசு வேலை தந்துள்ளேன்' என்று பெருமையோடு சொன்னார் விஜய். ஆனால் நீதிமன்றத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், 'சாதாரணமான அரசு வேலையைத் தான் தந்துள்ளோம்' என்று சொல்லி இருக்கிறார்கள். 'எந்த அரசுப் பணியும் சாதாரணமானது அல்ல' என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சந்தலையில் கொட்டி இருக்கிறார்கள். 'பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசுப் பணி தருவதற்குப் பதிலாக திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் தாருங்கள்' என்றும் வழிகாட்டி இருக்கிறார்கள்நீதிபதிகள். இதைவிட விஜய் ஆட்சிக்கு சம்மட்டி அடி அடிக்க முடியாது.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே, வழக்கில் இருந்து தப்பிக்க,தனது தலையைக் காப்பாற்றிக் கொள்ள, தனது மீதான பழியைத் துடைக்ககரூர் குடும்பங்களை வளைக்கப் பார்த்தார் விஜய். ரீல் அறுந்துவிட்டது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
