சொத்து வரி கட்டிட்டீங்களா? உடனே முடிச்சிருங்க.. இல்லாட்டி 1 % போயிடும்.. கெடுவைத்த சென்னை மாநகராட்சி
சென்னை: சொத்து வரி தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றினை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.. இது தொடர்பாக சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்து வரிகள் ஆகும்.. சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது..

இந்த வருவாயின் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வீடுகள்: அதனால்தான், வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள்.. இவர்களிடமிருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ-1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.. குறிப்பாக, அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
தனிவட்டி: அதுமட்டுமல்ல, அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.. அதன் பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும்.
கடந்த 2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் இலக்கை தாண்டி ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டைவிட ரூ.227 கோடி அதிகமாகும்.. நிலுவை வரியை வசூலிக்கும் விதமாக, நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாதோர் பட்டியல், மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
தள்ளுபடி அறிவிப்பு: இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1 முதல் 20-ம் தேதி வரை ரூ.190 கோடி வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வரியை செலுத்தி 5 சதவீத தள்ளுபடியையும் பெற்றுள்ளனர்.
இப்போதைய நிலவரப்படி, சென்னையில் 3லட்சத்து 70 ஆயிரம் பேர் சொத்துவரி நிலுவை இல்லாத சொத்து உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.. எனவே, பொதுமக்கள் 5 சதவீத தள்ளுபடியை பெற 30-ம் தேதிக்குள் சொத்துவரிசெலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரி எப்படி செலுத்துவது: வரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பிஓஎஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம்.
அல்லது "நம்ம சென்னை", பேடிஎம் செயலிகள், மாநகராட்சி இணையதளம் (www.chennaicorporation.gov.in), சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள க்யூஆர் கோடு மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம்.












Click it and Unblock the Notifications