"பச்சை தண்ணி பொங்குமா".. ரஜினி மாஸ்டர் பிளான்.. ஓகே சொன்ன "மேலிட" லீடர்கள்.. என்ன நடக்குது பாஜகவில்?
ரஜினிகாந்த்தை கவர்னர் ஆக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்களாம்
சென்னை: ரஜினிகாந்த் ஆளுநராக போகிறார் என்று தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கும்நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற விவாதம் மறுபடியும் சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பி உள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது.. இதற்காக தமிழகத்தை நோக்கி இப்போதே மேலிட பாஜக காய் நகர்த்த துவங்கிவிட்டது.
இதனிடையே, சமீபத்தில் ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார்.. அரசியல் காரணங்களுக்காக பேசினேன் என்று வெளிப்படையாக சொன்ன ரஜினி, அவைகள் என்ன என்பதை கூற மறுத்துவிட்டார்..

ஈர்ப்பு + அறுவடை
ஆளுநருடன் ரஜினி என்ன பேசியிருப்பார் என்ற யூகங்கள் வட்டமடித்து வந்தாலும், எப்படியும் ரஜினியை பாஜக முழுமையாகவே பயன்படுத்தி கொள்ளக்கூடும், அவரை இந்த முறை லேசில் நழுவ விடாது என்று சொல்லி வருகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ரஜினியை, மோடி தரப்பில் விரும்புகிறார்கள், அமித்ஷா தரப்பில் அந்த அளவுக்கு ரஜினி விஷயத்தில் ஆர்வம் காட்டப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும், ஆளுநர் பதவி ஒன்று அவருக்காக காத்து கிடப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது..

3 + பிளான்கள்
முதலாவதாக, ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து, சில பொதுக்கூட்டங்களில் பேச வைப்பது.. இதன்மூலம் இழந்துபோன ஆதரவை அறுவடை செய்து கொள்வது,.. இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பது.. என்பதே மேலிட தலைவர்களின் முடிவாக உள்ளதாம்.. கட்சி ரீதியாக ரஜினி பேச தயங்குவதால், கட்சி சாராத பொதுக்கூட்டங்கள் அல்லது விழாக்களை நடத்தி அதில் ரஜினியை பேச வைத்து பலனை தேடலாம் என்றும் கருதுகிறார்கள்... அல்லது ஏதாவது ஒரு சிறிய மாநிலத்தின் ஆளுநராக அதன் மூலம் வாக்குகளை எளிதாக பிரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிளான் 1
பாஜக இப்படி ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தால், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினியே மீண்டும் ஒருமுறை செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டதால், பாஜக கணக்கு எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகமும் எழுகிறது. ஏற்கனவே ரஜினி ஆசீர்வாதத்தினால், பாஜகவில் இணைந்துள்ளேன் என்று அர்ஜுன மூர்த்தி வெளிப்படையாகவே சொல்லிவிட்டு கட்சியில் சேர்ந்துள்ளதும் இங்கு முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிளான் 2
பாஜகவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்எஸ்எஸ் சித்தாந்தமே அர்ஜுனமூர்த்திக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டாலும், ரஜினியின் ரசிகர்களுக்கும் இவர் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே ரஜினி கட்சி ஆரம்பிக்காமல் நொந்துபோன ரசிகர்கள், பாஜக பக்கம் சாய்ந்து வரும் நிலையில், அர்ஜுனமூர்த்தி கட்சிக்குள் சேர்ந்துள்ளதும், பாஜக ரஜினியை விரட்டி பிடித்து வருவதும், எத்தகையை பலனை வரும் எம்பி தேர்தலுக்கு பெற்று தர போகிறது என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டுள்ளது.

பிளான் 3
இதற்குநடுவில், ரஜினி சார்பில் அவரது சகோதரர் சத்தியநாராயணாராவ் வழக்கம்போல் கொளுத்தி போட்டுள்ளார்.. அவரது பேச்சு, மீண்டும் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி உள்ளது. செய்தியாளர்களிடம் பேசும்போது, "ரஜினிகாந்த் படப்பிடிப்புகள் முடிந்ததும் ரசிகர்களை சந்திப்பார். இந்த சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, அமைய வாய்ப்பு உள்ளது... ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம்தான் உள்ளது" என்று பஞ்ச் வைத்துள்ளார்..

பழுதில்லாத வசூல்
ரஜினியை பொறுத்தவரை, எப்போதெல்லாம் தன் படங்கள் வெளிவருகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் என்ற வியாபார யுக்தியை கையில் எடுக்கிறார் என்றும், தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் பழுதில்லாமல் கொண்டு செல்வதற்கான அச்சாரமாக, ரசிகர்களை பயன்படுத்தி கொள்வது ரஜினியின் யுக்தியாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.. அதிலும், சமீபகாலமாக இவரது படங்கள் பெரிய அளவில் போகவில்லை என்பதாலும், சக நடிகரான கமலின் விக்ரம் படம் வசூலை வாரி குவித்துவிட்ட நிலையில், தன்னுடைய படத்தையும் வியாபாரமாக்க, ரஜினி அதே டெக்னிக்கை கையில் எடுப்பதாக கூறுகிறார்கள்..

பச்சை தண்ணி
அரசியலில் தனக்கான செல்வாக்கு இருந்தால், நிச்சயம் தன் ஆதரவை ரஜினி பெற்றே தீருவார், அதேபோல நல்ல படமாக இருந்தால், அது நிச்சயம் ஓடத்தான் போகிறது.. மற்றபடி, இதில் ரசிகர்களின் உசுப்பிவிட்டு, எந்த பலனையும் அடைய முடியாது.. பால் பொங்கும், பச்சை தண்ணி என்றைக்குமே பொங்காது என்ற கருத்துக்களும் இப்போதே இணையதளங்களில் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன.. அதனால், ரஜினி அரசியல் என்ட்ரி இருக்க போகிறதா? அல்லது கவர்னர் ஆக போகிறாரா? பிரச்சாரம் செய்ய போகிறாரா? அல்லது தன் படங்களை வெற்றி பெற வைப்பதற்காக பேசப்படும் அரசியலா இது? என்றெல்லாம் உறுதியாக தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அறிவாலயம்
இதற்கு நடுவில், ''2024 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக, ரஜினிகாந்த் நேரடி பிரசாரத்தில் இறங்குவார் என்ற செய்தி கசிந்து வரும் நிலையில், திமுக ஒரு மறைமுக உத்தரவை போட்டுள்ளதாம்.. அதாவது, இப்போதைக்கு ரஜினியை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும், சோஷியல் மீடியாக்களில்கூட எந்த பதிவுகளும், கருத்துக்களும் பதிவிடக் கூடாது என்றும் திமுக தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்.. இப்படி ஒரு உத்தரவு ஏன் என்றுதான் தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications