2 மேட்டர்.. 2 மெசேஜ்.. 2 கட்சிகள்.. மாஸ்டர் ப்ளானில் கிருஷ்ணசாமி.. அந்த தொகுதியாமே.. கவனிக்கும் திமுக
புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளாராம்
சென்னை: புதிய தமிழகம் கட்சியின் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.. அத்துடன் 2 விதமான மெசேஜ்களை இந்த மாநாடு சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது.
எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில், அதிமுகவும் மெகா கூட்டணியுடன் ஜரூராக ரெடியாகி கொண்டிருக்கிறது.
கடந்த வருடம் ஒரு கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, கூட்டணி குறித்து சிலவிஷயங்களை பகிர்ந்திருந்தார்.

2 ப்ளான்
"கடந்த காலங்களில் சில இடங்களுக்கு அவசரப்பட்டு கூட்டணி வைத்து தவறிழைத்து விட்டோம்.. நமக்கு அமைந்த கூட்டணிகள் நேர்மையான கூட்டணி இல்லை.. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று வெற்றி பெற்றார்கள்.. இனி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்" என்று கூறியிருந்தார்.. தற்போது எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், 2 விதமான அதிரடிகளை கிருஷ்ணசாமி மேற்கொள்வதாக சொல்கிறார்கள்.

டேமேஜ்
ஒன்று, குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி திமுக அரசை டேமேஜ் செய்வது, மற்றொன்று, பாஜகவின் பாசத்தை விடாமல் தக்கவைப்பது என்ற இருவித வியூகங்களையும் நகர்த்தி வருவதாக தெரிகிறது.. அதனால்தான், சமீபத்தில், எடப்பாடி பழனிசாமி நடத்தின உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு நேரடியாகவே சென்று ஆதரவு தந்து, திமுகவையும் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார் கிருஷ்ணசாமி.. "அதிமுக எம்எல்ஏக்கள் சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அதை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயக படுகொலை" என்று சொன்னதுடன், ஆவின் விலை உயர்வு குறித்தும் கண்டனம் தெரிவித்து திமுகவை சீண்டியிருந்தார்.

கலக்கல் கிருஷ்ணசாமி
இந்நிலையில், தன்னுடைய கட்சியை டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கி 25 வருடங்கள் ஆகிவிட்டது.. இதற்காக நேற்றைய தினம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி முடித்துள்ளார்.. 25ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வெள்ளி விழா சிறப்பு மாநாடு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலேயே நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, இன்பத்தமிழன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பங்கேற்றிருந்தனர்..

கிருஷ்ணசாமி
கிட்டத்தட்ட அதிமுக மாநாடு போலவே, கூட்டம் நடந்துள்ளதாக தெரிகிறது.. பெரும்பாலும் எடப்பாடியின் பழனிசாமியின் புகழாரம் எதிரொலித்துள்ளது. மாஜி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர்ராஜு பேசியபோது, "எனக்கு வேலை இருக்கு.. நீங்க 3 பேரும் மாநாட்டுக்கு போய்வாருங்கள். என் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் கிருஷ்ணசாமிக்கு வாழ்த்து சொல்லி வாருங்கள் என்று, எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. கிருஷ்ணசாமி ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை.

கன்பார்ம்டு
எல்லா சமூக மக்களின் பிரதிநிதியாக செயல்படக் கூடியவர். எல்லா சமூக மக்களையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அதிமுகவின் ஆசிர்வாதம் முழுமையாக கிருஷ்ணசாமிக்கு உண்டு.. கிருஷ்ணசாமியின் ஆசிர்வாதமும் எங்களுக்கும் உண்டு. எடப்பாடியார் எங்களிடம் சொல்லி அனுப்பினார் கிருஷ்ணசாமிக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்று. இப்போதுள்ள அரசு மாற வேண்டும். இந்த அரசின் அடையாளம் மாற வேண்டும் என்பதற்கு முதல் அத்தியாயமாக இந்த மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி நடத்தி இருக்கிறார்..

வெற்றிக்கனி
இந்த மாநாட்டில் 13 அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் என்றைக்கும் தேர்தல் நடைபெற்றாலும் மீண்டும் செயின்ட் சார்ஜ் கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்தான் முதலமைச்சர் என்று நாட்டு மக்கள் மனதில் வைத்துள்ளார்கள்" என்று பேசியிருக்கிறார்கள். வழக்கம்போல் ராஜேந்திர பாலாஜி மோடியின் புகழை இந்த மாநாட்டில் பாடினாலும், எடப்பாடியின் பெருமிதத்தை அபரிமிதமாகவே கேட்க முடிந்தது என்கிறார்கள்.

2 மேட்டர்
இந்த மாநாட்டை பொறுத்தவரை 2 விஷயங்கள் கசிந்து வருகின்றன.. அதிமுக கூட்டணியிலேயே புதிய தமிழகம் இந்த முறையும் ஐக்கியமாகும் என்பது உறுதியாகி உள்ளது.. அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு கிருஷ்ணசாமி குறி வைத்துள்ளதாகவும் தெரிகிறது.. காரணம், செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான், தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகளும் மிக அதிகம்... ஆனாலும், ஓட்டப்பிடாரத்தில் போதுமான வெற்றியை சுவைக்க முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியை டாக்டர் கிருஷ்ணசாமி குறி வைப்பதாக தெரிகிறது.

முன்னோட்டம்
அதற்காகத்தான் முன்னோட்டமாகவே கட்சி மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. ஒருபக்கம் பட்டியல் சமூகத்து வாக்குகள் ஆதரவு என்றால், இன்னொரு பக்கம், இந்துத்துவ அரசியல் முன்னெடுப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மனதிலும் இடம்பிடித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.. ஆக மொத்தம், ஓட்டப்பிடாரத்தில் இழந்ததை, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிடிக்க புது கணக்கை ஓபன் செய்துள்ளார் கிருஷ்ணசாமி.. இது எந்த அளவுக்கு அக்கட்சிக்கு பலன் தரப்போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!!












Click it and Unblock the Notifications