சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலவச கல்விக்கு பள்ளிக்கூடங்கள்... மாநில வளர்ச்சிக்கு ஆலைகளும் தந்த கர்ம வீரர் காமராஜர்

தமிழகத்தில் காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது என்பதனால்தான் அனைவருமே காமராஜர் ஆட்சி காலத்தை பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று இன்றைக்கு காங்கிரஸ் கட்சியினர் வார்த்தைக்கு கூறலாம். காமராஜரைப் போல ஒரு மகத்தான மக்கள் தலைவரை இன்றைக்கு யாரும் காண்பிக்க முடியாது. அப்படி ஒரு தலைவர் இனி பிறக்கப் போவதும் இல்லை. மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில் என்று புகழாரம் சூட்டியவர் தந்தை பெரியார். தமிழக முதல்வராக காமராஜர் ஆட்சி செய்த ஆண்டுகள் பொற்கால ஆட்சியாக இன்றைக்கும் போற்றப்படுகிறது. கிங் மேக்கராக திகழ்ந்த காமராஜரின் நினைவு நாளில் அவரது ஆட்சி காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை நினைவு கூறுவோம்.

தென்னாட்டு காந்தி என்று போற்றப்பட்ட கர்ம வீரர் காமராஜர் தமிழகத்தின் முதல்வராக 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பொறுப்பேற்றார். அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்த அவர் எளிமையான அமைச்சரவை, நேர்மையான ஆட்சியை கொடுத்து தமிழக மக்களின் மனதில் இன்றைக்கும் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் கூட தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை.

பின் தங்கிய சமுதாயத்தினருக்கு ஒதுக்கீடு

பின் தங்கிய சமுதாயத்தினருக்கு ஒதுக்கீடு

தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இதனை பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்தவர் காமராஜர். இதன் மூலம் பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்று வந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தார்.

இலவச கல்வி மதிய உணவு

இலவச கல்வி மதிய உணவு

காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். தனது ஆட்சி காலத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். 1957ஆம் ஆண்டில் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962ஆம் ஆண்டில் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆக அதிகரிக்கப்பட்டது.

என்னென்ன வளர்ச்சி

என்னென்ன வளர்ச்சி

தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் BHEL நிறுவனம் அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.

தொழிற்சாலைகள் அதிகரிப்பு

தொழிற்சாலைகள் அதிகரிப்பு

1951ஆம் ஆண்டில் தமிழகத்தில் 71ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது.

மின் உற்பத்தி திட்டங்கள்

மின் உற்பத்தி திட்டங்கள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன.

முக்கிய தொழிற்பேட்டைகள்

முக்கிய தொழிற்பேட்டைகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன.

நீர்பாசன திட்டங்கள்

நீர்பாசன திட்டங்கள்

கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின. புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. காமராஜர் செய்த சாதனைகளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்று ஒருநாள் போதாது எழுத பக்கங்கள் போதாது என்பதால் இளைய தலைமுறையினர் காமராஜரைப் பற்றி தெரிந்து கொள்ள இதுவே போதுமானதாகும். காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிட வேறு எந்த சான்றும் தேவையில்லை.

English summary
Do you know why we call the reign of Kamaraj as the Golden era
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X