கலைஞரின் கனவை நிஜமாக்குங்கள்.. சேலம் டூ சென்னைக்கு நடைபயணத்தை தொடங்கும் மருத்துவ சங்கத்தினர்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தும், மருத்துவர் சங்கத்தினர் இன்று சேலத்திலிருந்து சென்னை நோக்கி நடைபயணத்தை தொடங்க உள்ளனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசாணை 354-ஐ நிறைவேற்றியிருந்ததாகவும், ஆனால் இதுநாள் வரை இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்றும் சங்கத்தினர் கூறுகின்றனர்.

அதாவது, "மத்திய அரசு எம்.பி.பி.எஸ் மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவ 17 ஆண்டுகள் கழித்தும், 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற நிலை நிலவுகிறது.
இதன் விளைவாக மத்திய அரசு மருத்துவர் 13 ஆண்டுகள் பெறுகின்ற ஊதியமான ரூ.1,23,000-க்கு பதிலாக, மாநில அரசு மருத்துவர், ரூ.86,000 அடிப்படை ஊதியமாக பெறுகின்றர், 14வது ஆண்டு முதல் பணி மூப்பு அடையும் வரை மாதம்தோறும் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை மாநில அரசு மருத்துவர் குறைவான அடிப்படை ஊதியம் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே அடிப்படை ஊதிய மாநில அரசு மருத்துவருக்கு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசை வலியுறுத்தி வருகின்ற இன்று சேலம் மேட்டூரில் இருந்து, சென்னை நோக்கி பாதயாத்திரை செல்ல உள்ளோம். மருத்துவர்கள் தங்களை வருத்திக்கொள்ளும் இந்த நடைபயணத்தின் போது, மக்களை சந்தித்து கோரிக்கை குறித்து விளக்குவோம். குறிப்பாக பொது சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து பேசுவோம். ஆகவே முதல்வர் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் பெருமாள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், மருத்துவர்களின் பிரச்சனைகளை சரி செய்ய அரசாணை 354 இயற்றப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகள் ஆகியும் கூட, இன்னமும் இந்த அரசாணை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்களை உறுதி செய்ய வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1200க்கும் அதிகமான மருத்துவமனைகள் இருக்கிறது. தேசிய அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தத்தில் 10% படுக்கைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆனால், போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என்பது தொடர்ந்து பிரச்சனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
நமது மாநிலத்தில் கடந்த 2005ம் ஆண்டு மாதத்திற்கு 70 பிரசவங்கள் நடைபெற்றதாகவும், ஆனால் இப்போது இது 270ஐ கடந்திருக்கிறது என்றும் பிபிசி தமிழ் செய்தி ஊடகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த பிரசவங்களை கவனிக்க ஒரு அரசு மருத்துவமனைக்கு 7 மகப்பேறு மருத்துவர்கள் தேவை. ஆனால், வெறும் 3 மருத்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் பணி அழுத்தம் மருத்துவர்களை கடுமையாக பாதிக்கிறது என்றும் செய்தி ஊடகம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல், அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், மருத்துவ ஊழியர்கள்-பொதுமக்கள் மோதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு காரணம் போதிய அளவில் ஆட்கள் இல்லாததுதான். இதை சரி செய்ய வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications