மகளின் சொத்து.. விவாகரத்து பெறாதவருடன் சேர்ந்து வாழ்ந்த மகள் சொத்தில் தந்தைக்கு உரிமையுண்டு: கோர்ட்
சென்னை: மகளின் சொத்து பிரச்சனை குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.. அரக்கோணம் தாலுகாவில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வந்தார்... அதே பள்ளியில் டீச்சராக வேலைபார்த்து வந்தவர் மார்கரெட் அருள்மொழி.. இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்போது இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.

சொத்து: கடந்த 2010ல், மனைவி மார்கரெட் பெயரில் வீடு ஒன்றை ஜெயச்சந்திரன் எழுதி வைத்தார்... ஆனால், 2013ல் அருள்மொழி இறந்து விடவே, செட்டில்மென்ட் பத்திரத்தை தன்னிச்சையாக ஜெயச்சந்திரன் ரத்து செய்தார்.
இதையடுத்து, அருள்மொழியின் அப்பா யேசுரத்தினம், இறந்த மகளின் ஒரே சட்டப்பூர்வ வாரிசு தானே என்பதால், சொத்தை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி, ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பென்ஷன்: ஆனால், ஜெயச்சந்திரன் தரப்பிலோ இதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.. "கணவன் - மனைவியாக நாங்கள் வாழ்ந்தோம், குடும்ப பென்ஷன் உள்ளிட்ட சலுகைகள் பெற, என்னை பிரதிநிதியாக அருள்மொழி நியமித்தார். அதன்படி, என்னிடம் பென்ஷன் வழங்கப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கேட்டு பதில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், "இருவருக்கும் சட்டப்படி திருமணம் நடந்தது என்பது நிரூபணமாகவில்லை.. ஜெயச்சந்திரனும், அருள்மொழியும் சேர்ந்து வாழ்ந்ததை, சட்டப்படியான திருமணமாக கருத முடியாது. அதனால் அருள்மொழியின் தந்தைக்கு, சொத்தில் உரிமை உள்ளது" என்று உத்தரவிட்டது.
சட்டப்பூர்வ வாரிசுகள்: உடனே இந்த உத்தரவை எதிர்த்து, ஹைகோர்ட்டில் ஜெயச்சந்திரன் அப்பீல் செய்தார்... இந்த மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே, மாமனார் யேசுரத்தினம் இறந்துவிட்டார்... இதையடுத்து, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த மனுவானது, நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது...
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: "ஜெயச்சந்திரன் தரப்பில், முதல் மனைவியை சமுதாய வழக்கப்படி விவாகரத்து செய்து விட்டதாகவும், மார்கரெட் அருள்மொழியை திருமணம் செய்து, கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மனைவி மீதான அன்பு, பாசம் காரணமாக, வீட்டை எழுதி வைத்ததாகவும், அருள்மொழியின் பணி ஆவணங்களில் தன்னையே பிரதிநிதியாக குறிப்பிட்டு இருப்பதாகவும், ஜெயச்சந்திரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டெல்லா: ஆனால், முதல் மனைவி ஸ்டெல்லாவை விவாகரத்து செய்து விட்டதாக கூறுவதற்கு ஆதாரமாக, எந்த ஆவணங்களையும் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்யவில்லை. எனவே மறு திருமணத்துக்கு அவருக்கு தகுதியில்லை. அதனால், ஜெயச்சந்திரன் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
அதேபோல, மார்கரெட் அருள்மொழியை, அவரது மனைவியாகவும் கருத முடியாது. பணி ஆவணங்களில், இறுதி பலன்களை பெறுவதற்காக பிரதிநிதியை குறிப்பிடுவது வழக்கமான ஒன்றுதான்.. ஒருவரை பிரதிநிதியாக நியமித்ததற்காக, அவர் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு என்று சொல்லிவிட முடியாது. அதனால், ஜெயச்சந்திரனின் மனைவியாக அருள்மொழியை குறிப்பிட்டிருந்தாலும், சட்டப்படியான மனைவி என்று அவர் உரிமை கோர முடியாது.
கருத்து வேறுபாடு: கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு இருந்தாலும், திருமண உறவு என்பது சட்டத்தின் அடிப்படையிலானது. ஆனால், சேர்ந்து வாழ்வது என்பது, இருவருக்கு இடையேயான உடன்பாடுதானே தவிர சட்டப்படியான திருமணம் கிடையாது..
அதனால் ராணிப்பேட்டை கோர்ட் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.. ஜெயச்சந்திரன் தாக்கல செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. யேசுரத்தினம் இறந்து விட்டதால், இந்திய வாரிசுரிமை சட்டப்படி, வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற உரிமை உள்ளது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.. இந்த தீர்ப்பு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications