சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#Exclusive “தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறதா?”.. திராவிட கொள்கையில் தளர்வு? - அசராமல் அடிக்கும் கனிமொழி!

Google Oneindia Tamil News

சென்னை : "நான் தொடர்ந்து பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பாஜக தலைவர்களும் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்சி வளர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியாது" என திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கருணாநிதி, ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கருணாநிதி, திராவிடக் இயக்கக் கொள்கைத் தீரம் கொண்டவர். களத்திலும் சுற்றிச் சுழன்று பணியாற்றி வரக்கூடியவர். பாஜக அசுர பலத்தோடு நாடாளுமன்றத்தை நடத்தி வரும் நிலையில், சபையில் தமிழ்நாட்டின் முகமாக ஓங்கிக் குரல் எழுப்பக்கூடியவர்.

இன்று, பாஜக - திமுக இடையேயான மோதல் போக்கும், எதிர்ப்பும் தீவிரமடைந்திருக்கும் சூழலில், அதுகுறித்தும், தேர்தல் அரசியல் களத்தில் தனது சித்தாந்தப் பிடியில் தளர்வு ஏற்பட்டிருக்கிறதா என்பது பற்றியும் நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார் கனிமொழி எம்.பி. அவரது பேட்டி வருமாறு:

இரு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை- வானிலை மையம்! அப்போ மற்ற இடங்களில் என்ன நிலைஇரு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை- வானிலை மையம்! அப்போ மற்ற இடங்களில் என்ன நிலை

கனிமொழி மட்டும் தி.க

கனிமொழி மட்டும் தி.க

கேள்வி : "என் குடும்பத்தில் எல்லோரும் திமுக, என் மகள் மட்டும் திக" என கருணாநிதி குறிப்பிட்டார். இந்தக் கருத்தை அவர் சொன்னது உங்களுக்கு எப்படி இருந்தது? அது உங்களை சித்தாந்த ரீதியிலான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் உங்களை நிர்பந்திப்பதாக இருந்ததா?

பதில் : அப்பா அப்படிச் சொன்னபோது நான் அரசியலுக்கு வரும் எண்னத்திலேயே இல்லை. அப்போது, அவரது கருத்து நிஜம் தானே எனத் தோன்றியது. அப்பா அதைச் சொன்னபோது பெருமையாகவே சொன்னார். எனக்கும் அது பெருமையே. திகவுக்கும் திமுகவுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சித்தாந்தம் தான் அடிப்படை, திமுகவின் சித்தாந்தம் என்பது திராவிட இயக்கத்தின் கொள்கைகள். நான் எனக்காக வரித்துக்கொண்ட சித்தாந்தம் திராவிட இயக்க சித்தாந்தம். அதனால், இதை என் மீது யாரும் திணித்ததாக கருதவில்லை. திராவிட இயக்கச் சித்தாந்தத்தை நான் கைக்கொண்டது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. திராவிட முன்னேற்றக் கழகம் இன்று எத்தனையோ வெற்றி தோல்விகளைக் கடந்து வலுவாக நிற்கிறதென்றால் அதன் அடிப்படைக் கொள்கைகள் தான் காரணம்.

கொள்கை - தளர்வு?

கொள்கை - தளர்வு?

கேள்வி : சித்தாந்த ரீதியாகவும், கள அரசியலிலும் ஒரே நேரத்தில் செயல்படும்போது, சில நேரங்களில் கொள்கைகளை தளர்த்திக் கொள்ள வேண்டிய சூழல்கள் நேர்ந்திருக்குமே?

பதில் : அரசியலைப் பொறுத்தவரை சில விஷயங்களை விட்டுக் கொடுக்கிறோம். சில விஷயங்களை பொறுத்துக்கொண்டு கடந்து போகிறோம். அரசியலில் நாம் நம்பக்கூடிய கொள்கைகளை எப்படிச் சொல்கிறோம் என்பதில் வேண்டுமானால் சில மாறுதல் ஏற்படலாமேயொழிய, கொள்கைகளை தளர்த்திக் கொள்ளும் சூழல்கள் ஏற்படும் என்று நான் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. எனக்கு முற்றிலும் எதிர் கருத்தோடு இருக்கக்கூடிய ஒருவருக்கும் இந்தச் சமூகத்தில் இடம் இருக்கிறது என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண். ஒரு எதிர் கருத்தை முன்வைப்பதற்கான இடம் தான் இன்று குறைந்து கொண்டே வருகிறது என்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது.

அம்மாவின் கடவுள் நம்பிக்கை

அம்மாவின் கடவுள் நம்பிக்கை

கனிமொழி : நான் நம்பக்கூடிய எல்லா விஷயங்களையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விவாதிப்போம். ஜனநாயகத்தை தனது வீட்டுக்குள்ளேயே கொடுக்க முடியாதவர்கள் வெளியே எப்படி ஜனநாயகத்தைப் பற்றிப் பேச முடியும். என் அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அவர் கோவிலுக்குச் செல்வார். அப்பாவோ, நானோ, அதுபற்றி அம்மாவுடன் விவாதம் செய்திருக்கிறோம். எங்கள் கருத்தை நாங்கள் சொல்வோம். அவர் வைக்கும் எதிர் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் கோவிலுக்குச் செல்லக்கூடாது எனத் தடுக்கக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது.

டெல்லியில் சவால்

டெல்லியில் சவால்

கேள்வி : நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசும்போது குறுக்கிடுகிறார்கள். தமிழ்நாட்டின் பெருமைகளை சபையில் எடுத்துக் கூறுவதில் ஒரு எம்.பியாக என்ன மாதிரியான சவால்களை சங்கடங்களை சந்திக்கிறீர்கள்?

பதில் : எதிர் கருத்தை எதிர்கொள்வது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால், நாங்கள் கேள்விகள் வைக்கும்போது சரியான பதில்கள் கிடைப்பதில்லை. பல நேரங்களில் எங்கள் கேள்வியை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத, சில நேரங்களில் உண்மைக்குப் புறம்பான பதில்களைக் கேட்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தொடர்பாக நாம் கேள்வி எழுப்பினால், எல்லாவற்றையும் கொடுத்து விட்டோம் என்கிறார்கள். அது அப்பட்டமான பொய். அடிப்படையே பொய்யான ஒரு விஷயத்தை நாடாளுமன்றத்தில் சொல்வது தவறு. அதுதான் மரபு, அதுதான் நியாயம். ஆனால், பொய் சொல்வதை மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் சுட்டிக்காட்ட வேண்டும். அந்த நிலை கூட இன்று இல்லை.

அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை விமர்சனம்

கேள்வி : திமுக பாஜகவுக்கு பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது, மத்திய பாஜக அரசோடு ஒத்துழைப்பதே இல்லை. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தாங்கள் செய்ததாக திமுக அரசு காட்டிக்கொள்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டுவது பற்றி..?

பதில் : பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது. திமுகவை விடுங்கள், தமிழ்நாடு எப்படி அதனை ஏற்றுக்கொள்ள முடியும்? நமது ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு அரசு கொண்டு வருகிறது. அந்த மருத்துவக் கல்லூரிகளிலேயே நமது மாணவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்கும்போது எப்படி அதனை ஏற்றுக்கொள்ள முடியும்? ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் பிரச்சனைகளை சொல்லும்போது மத்திய அரசும் அதை காது கொடுத்துக் கேட்டு அந்த பிரச்சனையை தீர்க்க முன்வர வேண்டும். நாங்கள் மேலே இருந்துகொண்டு இதையெல்லாம் அருளுவோம், நீங்கள் ஏற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், அது எங்களால் முடியாது. தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை தமிழ்நாடு அரசு முடிவு செய்யும். தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர், நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இங்கு ஏன் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்?

பாஜக வளர்ந்துள்ளதா?

பாஜக வளர்ந்துள்ளதா?

கேள்வி : பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறது என்ற கூற்றை எப்படி பார்க்கிறீர்கள்? உண்மையாகவே பாஜக வளர்ந்திருக்கிறதா?

பதில் : நான் தொடர்ந்து பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பாஜக தலைவர்களும் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை நாம் பார்க்கிறோம். ஆனால், கட்சி வளர்ந்திருக்கிறது என்று நிச்சயமாக சொல்ல முடியாது, அப்படியான ஒரு சூழலையும் நான் பார்க்கவில்லை. இவ்வாறு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி.

English summary
“I am constantly visiting many places and meeting people. I Don't think BJP has grown,” : DMK deputy general secretary and MP Kanimozhi Karunanidhi said in an exclusive interview given to One India Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X