அங்க டென்ஷன்.. இங்க கூல்.. ஓபிஎஸ் டீமின் மூவ் ‘டெல்லி’ காதுக்கு போனால்..? சட்டென திரும்பிய எடப்பாடி!
சென்னை : அதிமுக விவகாரத்தில் பாஜக தலைமையின் தலையீடு விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு ஈபிஎஸ் டீமின் எதிர்வினைகளை டெல்லி தலைமை ரசிக்கவில்லை. இப்போது ஓபிஎஸ் டீம், டெல்லியை கூல் செய்யும்படியாகப் பேசியிருப்பது நல்ல பலனை உண்டாக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.
அதிமுக உட்கட்சி மோதல் விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்க முயன்று வருவது விமர்சனங்களைக் கிளப்பியது.
அதுகுறித்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சூடான பதில்களைச் சொன்னது பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமீபத்தில் கூட பாஜக புள்ளிகள், ஈபிஎஸ்ஸிடம் சுட்டிக்காட்டியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திடம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில், பாஜகவை குளிரவைக்கும் வகையில் அமைந்துள்ளது.
எடப்பாடி டீமுக்கு விபூதி அடித்த பாஜக.. 'என்ன சார்’.. எச்.ராஜா ஒரே பூரிப்பு - மதுரை மாஜிகளுக்கு ஷாக்!

டெல்லி நோக்கி படையெடுப்பு
அதிமுகவில் எழுந்த மோதலைத் தொடர்ந்து கடந்த ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முயன்றார். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, தனக்கு ஆதரவாக பாஜக தலைமையின் கரத்தை திருப்பும் நம்பிக்கையோடு டெல்லி சென்றார். ஆனால், பாஜக, ஈபிஎஸ் கோரிக்கைக்கும் செவி சாய்க்காததால் ஏமாற்றத்தோடு திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.

சென்னையிலும் முடியவில்லை
தனித்தனியாக டெல்லிக்குப் படையெடுத்துச் சென்றும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவராலும் பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்துப் பேச முடியவில்லை. அதிமுகவில் நிகழ்ந்து வரும் இந்த மோதல், கூட்டணிக்கு பாதகமாக அமையும் என்பதாலேயே பிரதமர் மோடி யாரையும் தனியாகச் சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்தபோது தனித்தனியாக சந்தித்துப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருந்தனர். ஆனால் பிரதமரோ இருவருக்கும் தனியான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் மட்டும் பேசினார் பிரதமர் மோடி.

பாஜக தயவு
பிரதமரைச் சந்திக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டுத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும், பாஜக தலைமையை சந்திக்கத் துடியாய்த் துடிப்பது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. உட்கட்சி விவகாரத்தில் இன்னொரு கட்சியின் தலைமையை நாட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விளாசின. எனினும், கட்சியில் தங்கள் கரத்தைத் தக்கவைக்க இருவரும் பாஜக தலைமையின் தயவையே நம்பி இருக்கின்றனர்.

பாஜக தலையீடு
அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தலையீடு தொடர்பாக எழுந்த சர்ச்சை பாஜக தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமியோடு இணைய ஒப்புக்கொண்டதே பிரதமர் மோடி சொன்னதால் தான் என்றும் கூறினார். இதை பாஜக தலைமை ரசிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, எங்கள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது, பாஜக ஆலோசனையை கேட்கும் நிலை இல்லை என்றெல்லாம் பேசி பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தினர்.

தலைமை டென்ஷன்
அதிமுகவின் மூத்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் பாஜகவை தாக்கும் வகையில் பேசி வந்ததை அறிந்த டெல்லி புள்ளிகள், எடப்பாடி பழனிசாமியிடமே, அவர்களை எல்லாம் கொஞ்சம் அடக்கி வையுங்கள் என அட்வைஸ் செய்தனர். இதனால் நிலைமையை உணர்ந்த ஈபிஎஸ், தனது ஆதரவாளர்களிடம் எடுத்துச் சொல்லி, பாஜகவை சீண்டும் வகையில் எதுவும் பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

ஓபிஎஸ் டீம் வைத்திலிங்கம்
இந்நிலையில், அதே பாஜக தலையீடு தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், டெல்லி தலைமை குளிர்ந்துபோகும் அளவுக்கு ஒரு பதிலைச் சொல்லியுள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்ற அடிப்படையில் எங்களது கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து வருகிறோம் என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுக ஒற்றுமைக்காக
மேலும், ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திப்பார். அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடுவதில் தவறில்லை. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவர்கள் தான் கட்சியை இணைத்து வைத்தார்கள்.ஏற்கனவே இரு அணிகளும் இணைவதில் பாஜக தலைமை உதவி இருக்கிறது. அதனால், அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவதில் எந்த தவறும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சூடான ஈபிஎஸ் டீம்
வைத்திலிங்கத்தின் இந்தக் கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஜெர்க் கொடுத்துள்ளது. தங்கள் அணியில் பலர் பாஜக தலையீடு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில், ஓபிஎஸ் டீம் இந்த மூவ், பாஜக தலைமையை அவர்களுக்கு சாதகமாக்கி விடுமே என ஈபிஎஸ் தரப்பு ஷாக் ஆகியுள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர் கேபி முனுசாமி இதுபற்றி பேசுகையில், அது வைத்திலிங்கத்தின் சொந்தக் கருத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது என சூடாகப் பேசியுள்ளார்.

பாஜக கவனம் திரும்புமா?
அதிமுக விவகாரத்தில் இரு அணிகளின் தலைவர்களின் நடவடிக்கைகளும் சிலர் மூலமாக டெல்லிக்கு பறந்து கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜக பற்றி விமர்சித்தவை எல்லாம் இப்படித்தான் டெல்லிக்கு சென்றது. இந்நிலையில், ஓபிஎஸ் டீமைச் சேர்ந்த வைத்திலிங்கத்தின் இந்த மூவும் டெல்லியின் காதுகளை எட்டினால், ஓபிஎஸ்ஸை நோக்கி பாஜக தலைமை தலையைத் திருப்பக்கூடும் எனக் கூறப்படுகிறது.