"என்னங்க நீங்க".. செய்தியாளர் சந்திப்பில் குறுக்கே போன நபர்.. டென்ஷனாகி எடப்பாடி சொன்னதை பாருங்க
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது குறுக்கே சென்ற நபரால் திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி டென்ஷனான அவரை பார்த்து சொன்ன வார்த்தை தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். மேலும் பத்திரிகையாளர்களை அவ்வப்போது சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக, பாஜகவை விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடினார்.
முன்னதாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேச தொடங்கினார். எடப்பாடி பழனிச்சாமி முன்பு மைக்குகள் வைக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் தயாராக இருந்தனர். அப்போது அவர், ‛‛எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வந்தபோது'' என தொடங்கினார். இந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பு குறுக்காக ஒருவர் நடந்து சென்றார்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் முகம் மாறியது. மேலும் அந்த நபர் மீது கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி, ‛‛ச்சோ.. என்னங்க நீங்க.. இருங்க வந்துவிடுகிறேன்.. குறுக்கே வராதீங்க'' என டென்ஷனானார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நேற்று கருணாநிதி எனும் தாய் என்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பற்றி கேள்வி எழுப்பட்டது. அதாவது ரஜினிகாந்த் "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் குறித்து அரை மணி நேரம் பேசியது மேலிடத்தின் உத்தரவாகத்தான் இருக்கும்" என பேசியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, "வெளியில் திமுகவும் பாஜகவும் எதிரி போல் தோற்றம் அளிக்கிறார்கள் ஆனால் உள்ளே உறவு வைத்துள்ளார்கள். திமுகவும் பாஜகவும் நாடகம் ஆடுகிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் உண்மையை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். வெளிப்படையாக பாஜக திமுக உறவை சொன்ன ரஜினிகாந்துக்கு நன்றி'' என்றார்.
அதேபோல் அண்ணாமலையையும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். அதிமுக ஊழல் ஆட்சி மோசமான ஆட்சி என்றெல்லாம் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளாரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛அதிமுகவுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்ட போதெல்லாம் இது தெரியவில்லையா? அதிமுக ஆதரவுடன் பல்வேறு மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றிய போதெல்லாம் இது தெரியவில்லையா? எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எங்கள் ஆதரவால் தான் இன்று பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
மைக் கிடைத்தால் போதும் அண்ணாமலை பொய்யாக பேசுவார். அண்ணாமலைக்கு ஒரே முதலீடு வாயும், நாக்கும் தான். ஏதோ ஒரு வழியில் பதவியை பெற்றுவிட்டு தலைகால் புரியாமல் ஆடுகிறார். உழைக்காமல் தலைவரான ஒரே நபர் அண்ணாமலை தான்'' என்று கடுமையாக தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications