சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு ஏலம் விடுவதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது: ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு ஏலம் விடுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்கப்பட்ட 105 படகுகளை ஏலம் விடும் பணிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது கண்டிக்கத்தக்கது.

கச்சத்தீவு திருவிழா- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியது டி.ஆர்.பாலு எம்.பி! கச்சத்தீவு திருவிழா- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியது டி.ஆர்.பாலு எம்.பி!

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இராமநாதபுரம் வரையிலான கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையானதாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் இன்று முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 65 மீன்பிடிப் படகுகள் இன்று காலை முதல் ஏலம் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் துணிச்சல்

இலங்கையின் துணிச்சல்

தமிழ்நாட்டு மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விடப்போவதாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி இலங்கை அரசு அறிவித்த போது அதைக் கண்டித்ததுடன், உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் நான் வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அதன்பின் இரு வாரங்களுக்கு மேலாகியும் மத்திய அரசுத் தரப்பில் இலங்கை அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அதன் காரணமாகவே தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு துணிச்சலாக ஏலம் விடுகிறது.

மத்திய அரசு தடுக்க வேண்டும்

மத்திய அரசு தடுக்க வேண்டும்

யாழ்ப்பாணம் காரை நகர் துறைமுகத்தில் உள்ள படகுகள் இன்று ஏலத்தில் விடப்படும் நிலையில், நாளை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள 5 படகுகளும், பிப்ரவரி 9-ஆம் தேதி கிராஞ்சியில் உள்ள 24 படகுகளும் பிப்ரவரி 10-ஆம் தேதி தலைமன்னாரில் உள்ள 9 படகுகளும் பிப்ரவரி 11-ஆம் தேதி கற்பிட்டியில் உள்ள 02 படகுகளும் ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏலம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால் பல்லாயிரக்கணக்காணோர் வாழ்வாதாரம் இழக்கும் ஆபத்து உள்ளது. ஒரு விசைப்படகில் 10 மீனவர்கள் வரை கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார்கள். ஒரு படகு பறிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டால் 10 மீனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 50 முதல் 60 பேர் வரை வாழ்வாதாரம் இழப்பார்கள். 105 படகுகள் ஏலத்தில் விடப்பட்டால் குறைந்தது 7500 பேரின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். இதை உணர்ந்து படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3-வது முறையாக ஏலம்

3-வது முறையாக ஏலம்

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விடுவது இது முதல் முறையல்ல. கடந்த 2014, 2020 ஆகிய கால கட்டங்களிலும் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பது., ஏலத்தில் விடுவது போன்ற அத்துமீறல்களை இலங்கை அரசு அரங்கேற்றியது. இப்போது மூன்றாவது முறையாக தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு ஏலம் விடுகிறது. இதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.

 கைவிட செய்க

கைவிட செய்க

உணவுக்குக் கூட வழியில்லாமல் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ. 18,090 கோடி கடன்வசதி வழங்கியுள்ளது. அதில் ரூ.3500 கோடி கடனுக்கான ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன் தான் கையெழுத்து இடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியா- இலங்கை உறவு குறித்து பேச்சு நடத்துவதற்காக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் 3 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வந்திருக்கிறார். இத்தகைய சூழலில் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதும், அதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் இந்தியாவின் நிலையை வலுவிழக்கச் செய்துவிடக்கூடும். தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படும் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, படகுகள் ஏலம் விடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருடனான பேச்சுகளின் போது தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இலங்கை கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has urged that the Centre should stop the Srilanka's auction to Tamilnadu Fishermen Boats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X