மாட்டிக்கிட்டோம் பங்கு! ஒரே ஃபேமிலி..ஆனா வேற வேற ஸ்டோரி! நீயா நானா, தமிழா தமிழாவில் நாடக நடிகர்கள்?
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா மற்றும் ஜீ தமிழில் வெளியாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சிகள் மக்கள் மனதை கவர்ந்து இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் சீரியல் நடிகர்கள் போல, ஒரே குடும்பம் இரு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறது. அது பிரச்சனை இல்லை, ஆனால் இரண்டு நிகழ்ச்சிகளிலும் வேறு மாதிரி அவர்கள் பேச அவர்களது மகள் மருமகள் சாட்சி சொல்வது போல இருப்பதை கண்டுபிடித்துள்ள நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் எப்போதுமே முன்னணியில் இருப்பது விஜய் டிவி. மற்ற தொலைக்காட்சிகள் போல சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் நீயா நானா, பிக் பாஸ், அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் அந்த தொலைக்காட்சியை தனி இடத்தில் வைத்திருக்கிறது.

குறிப்பாக கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா அந்த தொலைக்காட்சியின் சிக்னேச்சர் ஷோவாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டாலே நீயா நானாவை பார்ப்பதற்கென்றே ஒரு தனி கூட்டம் இருக்கிறது.
இரு வேறு கருத்து உடையவர்களை நேரடியாக அமர வைத்து அவர்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்டு வாங்கி, அதற்கான விளக்கத்தை கொடுப்பது கோபிநாத்தின் தனிச்சிறப்பு. பல நேரங்களில் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் நீயா நானா பேசு பொருளாக மாறி இருக்கிறது. நீட் விவகாரம், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி சாப்பாட்டு பிரியர்கள் வரை பல்வேறு விவாதங்கள் நீயா நானாவில் அரங்கேறி இருக்கிறது. அதன் ஜெராக்ஸ் காப்பி போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கிய நிலையில் அதிலிருந்து அவர் வெளியேறினார். இதை அடுத்து தற்போது பிரபல ஆங்கர் ஒருவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நீயா நானாவின் காப்பி தான் தமிழா தமிழா என்பதை அப்போதைய தொகுப்பாளரான கரு.பழனியப்பனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது சீரியல் போல நீயா நானா, தமிழா தமிழா ஸ்கிரிப்டடா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது. கடந்த வாரம் விஜய் டிவியில் "சண்டை போடும் மாமனார் மாமியார்" என்ற தலைப்பிலும், ஜீ தமிழின் தமிழா தமிழாவில் "கிராமத்தில் வசிக்க விரும்பும் பெற்றோர் - அவர்களை நகரத்திற்கு நகர்த்த முயலும் குழந்தைகள்" என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அந்த இரு நிகழ்ச்சிகளிலுமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பங்கெடுத்து இருக்கின்றனர்.

அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஒருவர் எத்தனை நிகழ்ச்சிகளில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் முதல் நிகழ்ச்சியில்,"தாங்கள் சிதம்பரத்தில் வசிக்கிறோம், கணவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். மனைவி சென்னையில் தனது மகனின் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். இதனால் இருவருக்கும் சண்டை" ஏற்படுவதாக பேசினார்கள். அந்த நிகழ்ச்சியில் அவர்களது மருமகள் என ஒரு பெண் வீட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பேசினார்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் அதே தம்பதி பங்கெடுத்து, "10 வருடங்களாக இருவரும் சென்னையில் வசிப்பதாகவும், சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும்" என நினைப்பதாக பேசி இருந்தனர். மேலும் தங்கள் மகன் தங்களுக்கு மாதம் ஆனால் இருபதாயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக பேசுகின்றனர். அதிலும் அவர்களின் மருமகள் என அதே பெண் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் இதனை கண்டுபிடித்த நெட்டிசன்கள் டிவி சீரியல்களில் வருவதுபோல் நீயா நானா, தமிழா தமிழா ஸ்கிரிப்ட்டால் நாடக நடிகர்கள் போல குறிப்பிட்ட சிலரை அழைத்து வந்து பேச வைப்பதாகவும், ஏற்கனவே ரிகர்சல் செய்து அவர்களை பேச வைப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. பட்டிமன்ற நிகழ்ச்சிகள் போல ரியாலிட்டி ஷோக்கள் மாறி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications