நீதிபதிகள் நியமனத்தில் உயர்ஜாதி ஆதிக்கம்- சமூக நீதி கோரி பிப்.11-ல் தி.க. ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி
நாட்டில் நீதிபதிகள் பதவிகளிலும் உயர்ஜாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார் கி.வீரமணி
சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை செயல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 11-ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி கூறியுள்ளதாவது: நிர்வாகத் துறையின் ஆணைகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா? செல்லாதா? என்பதை நிர்ணயிக்கும் கடமையும், பொறுப்பும் நீதித்துறையின் அதிகாரமாக இருப்பதால், இத்துறை அந்த இருபெரும் துறைகளைவிட சக்திவாய்ந்ததாகும்! நம் நாட்டில் உலகில் எங்குமில்லாத ஜாதி, தீண்டாமை பேதம் வளர்க்கும் சமூக அமைப்பு இருப்பதால், வழக்குரைஞர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவோர் மாவட்ட நீதிபதிகளிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள்வரை நியமனம் செய்தாலும், அறிந்தோ அறியாமலோ ஜாதி உணர்வு, ஆதிக்க மனப்பான்மையிலிருந்து விலகி நீதிபதி போன்று நடுநிலை நின்று, 'ஓர்ந்து கண்ணோடாது' தேர்ந்த நீதிபரிபாலனம் செய்ய இயலாத நிலை. வேறு சிலர் தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளின் சிந்தனை வட்டத்திலிருந்து வெளியே வர முடியாதவர்கள், நீதித் தராசு சாயவும் செய்கிறது!

சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே (Preamble) வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய கோட்பாடு.
ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூக அநீதியே பெரிதும் கோலோச்சுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்!
நடைபெறுவது மக்களாட்சி, ''ஜனநாயகக் குடியரசு'' - (Democratic Republic) மக்கள் பிரதிநிதித்துவம், மக்கள் பங்களிப்பும் அவர்களது உரிமை!
மிக சக்தி வாய்ந்த நீதி பரிபாலனத்தின் நியமனங்களில் சமூகநீதி பெரிதும் காணாமற்போய்க் கொண்டே இருக்கிறது!
100-க்கு 3 பேர்களாக உள்ள பார்ப்பனரும், 10 சதவிகிதத்திற்குள் இருக்கும் மற்ற உயர்ஜாதிக்காரர்கள் நீதிபதிகளாக உச்சநீதிமன்றத்தினையும், உயர்நீதிமன்றங்களையும் ஏக போக ஆதிக்கம் செலுத்தும் சமூகஅநீதியே கொடிகட்டிப் பறக்கிறது! சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், ''ஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்பும், அதிகாரப்பகிர்வும்'' என்றார்!
தகுதிமிக்க மூத்த நீதிபதிகளான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. - மைனாரிட்டி சமூகங்களில் இருந்தும்கூட, அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில்லை. இதில் கொலீஜியம் முறையும் சரி, ஒன்றிய சட்ட அமைச்சகமும் சரி ஒன்றுக்கொன்று எதிர்மறை விமர்சனங்களில் ஈடுபட்ட போதிலும், சமூகநீதி புறக்கணிப்பைப் பொறுத்தவரையில் இரண்டு அமைப்புகளும் ஒத்த கருத்தோடு உயர்ஜாதியினருக்கே கதவு திறந்து விடுவதை 'தர்மமாக' கடைப்பிடித்து வருவது கண்டு நெஞ்சம் குமுறுகிறது!
எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34.
32 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.
இதில்
ஒரே ஒரு எஸ்.சி., நீதிபதி -
ஒரே ஒரு ஓ.பி.சி. நீதிபதி (எஸ்.டி., இருக்கிறார்களா தெரியவில்லை)
சிறுபான்மைச் சமூக நீதிபதிகள் இரண்டு.
இப்படி பிரித்துப் பார்த்தால்
32 இல் 27 அல்லது 28 நீதிபதிகள் (பெண்களாக நியமனம் ஆகியிருந்தாலும் உயர்ஜாதியிலிருந்தே!) உயர்ஜாதிகளைச் சேர்ந்தோராவர்.
அரசமைப்புச் சட்டம் விதித்த சமூகநீதியைப் பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும்.
கேரளாவில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகி சில ஆண்டுகள் ஆன ஒரு எஸ்.சி., நீதிபதிக்கு உச்சநீதிமன்றக் கதவுகள் திறக்க மறுத்தே வந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் அவர் ஓய்வு பெறவிருக்கிறார். அவர் உச்சநீதிமன்றம் செல்ல போதிய அனுபவம், தகுதி, திறமை இருந்தாலும், வாய்ப்பற்று பதவி ஓய்வு பெறவேண்டிய நிலைதான் எதார்த்தம்.

அதுபோலவே, பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. பலர் ஓய்வு பெற்றும் அப்பதவிகள் நிரப்பப்படாததால், தற்போது உள்ளவர்கள் 52 நீதிபதிகளே!
தற்போது (6.2.2023) 5 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளார்கள். இதில் இரண்டு பேர் பார்ப்பனர்கள்; ஒரு பெண் நீதிபதி - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உணர்வாளர் - வெறுப்புப் பேச்சுகளில் வித்தகர் இவர் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்கள் - நடந்தது என்ன? இரட்டைத் தாழ்ப்பாள்; அந்த அம்மையார் நியமனம் செய்யப்பட்டு, இன்று (7.2.2023) பதவியேற்றுள்ளார்!
3 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 52 நீதிபதிகள். தற்போது 9 பார்ப்பன நீதிபதிகள்; இப்போது புதிய நியமனம் 2; ஆக 11 பேர் பார்ப்பனர்கள்!
வெகு தந்திரமாக ஒவ்வொரு பட்டியலையும் அனுப்பும்போது 2, 3 என்று உள்ளே நுழைத்து விடுகிறார்கள்! இதில், காவி மனப்பான்மையாளர்கள் என்பதே நீதிபதிகள் நியமனத்திற்கான மறைமுக அடிப்படை முக்கியத் தகுதி என்ற மற்றொரு முக்கிய வேதனை நிலையும் நீடிக்கிறது! அந்தப் பிரச்சினைக்குரிய அம்மையார் ''சவுக்கிதார் விக்டோரியா கவுரியாம்'' எப்படி பட்டாங்கமாய் சர்வமும் பார்ப்பன மயமாக இருக்கிறது. இன்று (7.2.2023) உச்சநீதிமன்றத்தில் அவருடைய நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் ''அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம்'' என்ற கிராமத்துப் பழமொழி போன்ற நிலைதான்.
எனவே, இந்த நியமனங்களுக்குக் கண்டனம் தெரிவித்தும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் அல்லது முக்கிய நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில், வருகிற 11.2.2023 அன்று சனிக்கிழமை காலையோ, மாலையோ கண்டனப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையில் அந்த அறப்போராட்டம் காலை 11 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும். ஆங்காங்கே உள்ள கழகப் பொறுப்பாளர்கள் உடனே காவல்துறைக்கு எழுதிக் கொடுத்து நடத்துங்கள்; அனுமதி மறுத்தாலும், மீறி கைதாகும் நிலை வந்தாலும் நடத்துவதை தவிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்!
சமூகநீதியைக் காப்பாற்றாமல், நாமிருந்து என்ன பயன்? ஒத்தக் கருத்துள்ளவர்கள், அமைப்புகள் வந்தாலும் அவர்களையும் இணைத்துக் கொள்வோம்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications