எனக்கும் முதல்வர் கனவு உண்டு.. ஒரு புள்ளியை வச்சிட்டு வாசல் முழுக்க கோலம் போட முடியாது: திருமாவளவன்
சென்னை: "முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு எனக்கும் உண்டு என்று கூறினேன். அதற்காக முதல் புள்ளியை வைத்துள்ளோம், ஒரு புள்ளி வைத்துக்கொண்டு வாசல் முழுக்க கோலம்போட நினைக்கக் கூடாது." என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தனியார் மண்டப திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசினார் திருமாவளவன்.

அப்போது திருமாவளவன் பேசுகையில், "தேர்தலில் அதிக சீட் வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ பழனி மலைக் கோயிலுக்கு வரவில்லை. என் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதனால் அதனை காண்பதற்காகவே வந்துள்ளேன்.
நான் அரசியல் களத்திலே அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம், எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது. அதை அவ்வளவு எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது. நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தேன். நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று சொல்லி இருக்கிறேன். அப்படியென்றால் நானே முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதையே அப்படிச் சொன்னேன்.
அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம். இன்னும் கோலம் போட பல புள்ளிகள் தேவைப்படுகிறது. ஒரு புள்ளி வைத்துக் கொண்டு வாசல் முழுவதும் கோலம் போட முடியாது. நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும். அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது. கட்சி தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள், அது வேறு. நாம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருக்கிறோம்.
தமிழகத்தில் அரசியல் விதிகளை திருத்தக்கூடிய வலிமை பெற்றவர்களாக மாற வேண்டும். தென்னிந்தியா முழுவதும் சிறுத்தை கொடி பறக்கிறது. மகாராஷ்டிராவிலும் இன்று சிறுத்தைக் கொடி பறக்கிறது, மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதற்காக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமனம் செய்துள்ளோம். இந்தியாவிலேயே எந்தக் கட்சியிலும் இவ்வாறு இல்லை. அந்தளவுக்கு துணிச்சலோடு இறங்கி இருக்கிறோம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications