சென்னைக்கு ரெட் அலர்ட்.. இடைவிடாமல் பெய்யும் மழை.. சென்னை வானிலை மையம் வார்னிங்!
சென்னை: சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு பக்கம் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இன்னொரு பக்கம் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதுபோக நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

மழை நீடிக்கும்
இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை நீடிக்க உள்ளது. முக்கியமாக சென்னையில் தீவிர கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு நீர் நிலைகள், ஏரிகள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக நேற்று மாலை தொடங்கிய மழை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று தலா 500 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இன்னொரு பக்கம் பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவிட்டது.

வெள்ளம்
இதனால் இந்த ஏரிகளை ஒட்டி இருக்கும் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இந்த பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல நீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. சென்னையில் நேற்று மாலையில் இருந்து காலை 8 மணி வரை 207 மிமீ மழை பெய்துள்ளது. மழை மேலும் சில மணி நேரங்களுக்கு நீடிக்க உள்ளது.

மழை நீடிக்கும்
சென்னையில் மேலும் மழை நீடிக்க உள்ளதால் சாலைகளில் நீர் அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
