வைகோ அவுட்.. ராஜ்யசபா சீட் தராத திமுக.. உடனே துரை வைகோ ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கப்படாத நிலையில் துரை வைகோ பேட்டி அளித்துள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் என துரை வைகோ உறுதி செய்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல, எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா சீட்
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த வகையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல, அதிமுகவின் சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலமும் முடிகிறது.
இதற்கான தேர்தலை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜூன் 9ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 10-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டி இருந்தால், அதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணிக்கு தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக கணக்கில் 4
தற்போது உள்ள எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆளும் திமுக கூட்டணிக்கு 159 வாக்குகள் இருப்பதால், 4 இடங்கள் உறுதியாக கிடைக்கும். திமுக மூன்று இடங்களில் போட்டியிடவுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி அரசுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்த வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.எம்.அப்துல்லா, சண்முகம் ஆகியோருக்கு பதிலாக எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது என திமுக ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அந்த இடத்திற்கு போட்டியிட உள்ளார்.
வைகோ அவுட்
2019 நாடாளுமன்ற தேர்தல் ஒப்பந்தப்படி ஒரு மாநிலங்களவை ஒரு மக்களவை என்ற அடிப்படையில் , தற்போது நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலிலும் மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் மதிமுக கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியானது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நிலையில் வைகோவுக்கு ஒரு சீட் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கும் எனக் கூறப்படுகிறது.
துரை வைகோ பேட்டி
இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேட்டி அளித்துள்ளார். அதில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம். நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல, எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications