உதயநிதியின் புத்திக்கூர்மை பற்றி அன்றைக்கே வியந்த கருணாநிதி! துரைமுருகன் பகிர்ந்த ஃபிளாஷ்பேக்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் புத்திக்கூர்மை பற்றியும் அவர் பின்பற்றும் கொள்கை குறித்தும் அன்றைக்கே கருணாநிதி தன்னிடம் வியந்து கூறியதாக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் ஃபிளாஷ்பேக் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியால் அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் இதனால் உயர்ந்த பொறுப்புகளுக்கு பொருத்தமானவர் உதயநிதி ஸ்டாலின் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தான் இவ்வாறு பேசியிருக்கிறார்.

கருணாநிதியை பொறுத்தவரை ஸ்டாலினுக்கு அரசியலிலும், கட்சியிலும் நிறைய பரீட்சைகள் வைப்பார் என்றும் அதில் அவர் தேர்வானால் தான் அடுத்தடுத்த பதவிகளை கொடுப்பார் என்று கூறிய துரைமுருகன், கருணாநிதி வைத்த பரீட்சையில் பாஸ் ஆனதால்தான் ஸ்டாலினால் திமுகவில் துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என உயரங்களை அடைய முடிந்தது என்றார்.
கட்சியை போலவே ஆட்சியிலும், நிர்வாகப் பொறுப்புகளிலும் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக படிப்படியாக உயர்ந்த பொறுப்புகளுக்கு வந்தார் என்றும் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அனைவர் மனதிலும் நிறைந்திருக்கிறார் என்றும் அவருக்கான உயர்ந்த இடங்கள் விரைவில் அவரை தேடி வரும் எனவும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை பொறுத்தவரை சாதாரணமானது அல்ல என்றும் தந்தையை போலவே மிகக் கடுமையாக உழைத்து வருகிறார் எனவும் பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். உதயநிதி ஸ்டாலினின் புத்திக்கூர்மை பற்றி இப்போதில்லை அப்போதே தனக்கு கருணாநிதி மூலம் தெரியும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் என்னென்ன பேசினார் என்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் என குடியாத்தம் குமரன் வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில் உதயநிதி பற்றி போகிற போக்கெல்லாம் புகழாரம் சூடி வருகிறார்.












Click it and Unblock the Notifications