அன்றே குடந்தையை புரட்டிப்போட்ட செழியன்! பேச்சாளர் டூ உயர்கல்வி அமைச்சர்.. திமுக தரமான சம்பவம்
சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள கோவி செழியனால் திமுகவிற்குள் ஒரு புதிய வரலாற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக அதிமுகவில்தான் அடிமட்ட தொண்டன் கூட அமைச்சராக வரலாம் என்று அடிக்கடி ஒரு வசனம் காதில் விழுந்து கொண்டே இருக்கும். அதற்கு சில உதாரணங்களைக் கூடச் சொல்வார்கள். சாதாரண பஸ் ஓட்டுநராக இருந்த தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவைத்தலைவராக அமர்ந்தார். அப்படித்தான் அதிமுக ஆட்சியில் சபாநாயகர் பதவியில் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டார் தனபால்.

இப்படி அதிமுகவில் சிலரை அடிக்கடி சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். அந்த வசந்த காலம் இப்போது திமுக பக்கம் திரும்பி இருக்கிறது. திமுகவின் தலைமைக்காகப் பேச்சாளராக இருந்து வந்த கோவி செழியனை தமிழக அரசு தலைமைக் கொறடாவாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். அப்போதும் கூட மிக எளிமையாகவே வலம் வந்தார் செழியன். எந்த நேரத்திலும் எது தொடர்பாக அழைத்தாலும் உடனடியாக பதிலளிக்கக் கூடிய ஒருவராக இருந்துவந்தார்.
இரண்டு நாட்கள் முன்னதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் கோவி செழியன். கடைசி வரை அமைச்சர் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த போதுகூட அதில், இவரது பெயர் அடிபடவே இல்லை. அதுவும் திமுகவின் அதிகார மிக்க அமைச்சராக இருக்கும் பொன்முடியை தூக்கிவிட்டு அந்த இடத்திற்கு இவர் நியமிக்கப்படுவார் என்ற ரகசியம் முதல்வரை தவிர வேறு யாருக்கும் தெரியாத பரம ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோவி செழியன் இதே தொகுதியிலிருந்து மூன்றுமுறை தொடர்ச்சியாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட இந்தத் தொகுதி இவரது கட்டுப்பாட்டை மீறிப் போகவில்லை.

இப்படி அடிமட்ட தொண்டனாக இருந்து உயர்கல்விக்கு அமைச்சராக வளர்ந்துள்ள இவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுடன் ஒரே காலகட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கோவி செழியன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சோழபுரம் பக்கத்தில் உள்ள ராஜாங்கநல்லூர் கிராமத்தில் 1966 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பிறந்தவர். இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்த இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் தமிழ் மற்றும் சமூகவியல் முடித்தார். பின்னர் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் பேச்சுக் கலை பற்றி ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
செழியனுக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே முரசொலி பத்திரிகை அறிமுகமாகி இருந்தது. அவரது அப்பா அதை வீட்டுக்கு வரவழைத்து இருந்தார். ஆகவே அதில் வெளிவந்துள்ள மு.கருணாநிதியின் கடிதங்களை ருசியாகப் படிக்க ஆரம்பித்தார் செழியன். அதன்மூலம் சமூக அக்கறை ஏற்பட்டது என இவரே பேசி இருக்கிறார். கும்பகோணம் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் மாணவர் தேர்தல் மிகப் பிரபலமானது. அந்தக் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் செழியன் அந்தத் தேர்தலில் நின்று வென்றும் காட்டினர். ஒரு தலித் மாணவர் முதன்முதலாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற சாதனை இவரால் நிகழ்த்தப்பட்டது. அப்போதே பலரது பார்வை செழியன் மீது விழுந்தது.
இவர் சட்டக்கல்லூரியில் படிப்பதற்காகச் சென்னைக்கு வந்த காலத்தில் கல்லூரி முடிந்த உடனே நேராக அறிவாலயம் வருவதை வழக்கமாகக் கொண்டார் செழியன். அங்கே அவருக்குப் பல முகங்கள் அறிமுகமாகின. அப்படியே மு.கருணாநிதியின் அறிமுகம் இவருக்கு இளைமையிலேயே வாய்த்தது. அங்கே படிப்படியாக வளர்ந்து பேச்சாளரானார். பல மேடைகளில் கலைஞர் எழுதிய கவிதைகளை வெள்ளம் போல் கொட்டத்தொடங்கினார். அதனால் கட்சியில் மாவட்டம் தாண்டிய செல்வாக்கு பெருகியது.
திமுக தொண்டர்கள் மத்தியில் கோவி செழியன் என்றால் அவர் தரமான பேச்சாளர் என்பதுதான் முதல் அடையாளமாக இருந்தது. அதன்பின்னர் சட்டமன்ற உறுப்பினர். அதுவும் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த காலத்தில் கூட தன் தொகுதியை தக்கவைத்த பெருமையை இவர் பெற்றார். திமுகவினரே வரை உற்றுப் பார்க்கத்தொடங்கினர். இந்நிலையில்தான் ஸ்டாலின் ஆட்சியில் கொறடா ஆனார். அப்போதே இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனப் பலரும் சொன்னார்கள். அவரும் கூட எதிர்பார்த்தார். ஆனால், கொறடா என நிலையை மட்டுமே அவரால் எட்டிப் பிடிக்க முடிந்தது.
இவ்வளவு காலம் காத்திருந்த கோவி செழியனுக்கு அதிகாரம் மிக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் என்று மட்டும் இதைச் சுருக்க முடியாது. ஒரு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கு இந்தப் பதவியை திமுக வழங்கி உள்ளது தலைகீழ் மாற்றம். அதிகார பரவலாக்கல். ஆகவேதான் இவர் இப்போது அதிகம் பேசப்படுகிறார். கோவி செழியனின் தந்தை பெயர் கோவிந்தன், தாய் பெயர் பட்டு. மனைவியின் பெயர் உமாதேவி. இந்தத் தம்பதிக்கு அபிநயா மற்றும் சபரி செல்வன் ஆகிய இரண்டு வாரிசுகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications