அமைச்சர் கே.என்.நேரு தம்பி வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை.. 5 மணி நேரம் நடந்த விசாரணை!
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இல்லத்தில் அதிகாரிகள் தொடர்ந்து 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், கே.என். நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி தி.மு.க எம்.பியுமான அருண் ஆகியோரை குறி வைத்து அதிரடி சோதனையில் இறங்கியது அமலாக்கத்துறை. இவர்களுக்கு சொந்தமான சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் நேருவின் சகோதரி உமா மகேஸ்வரி மற்றும் டி.வி.எச் நிறுவன முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள ரவிச்சந்திரனின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து சில ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டி.வி.எச். நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. அடையாறு காந்தி நகரில் உள்ள டி.வி.எச் நிறுவன இயக்குநர் ரமேஷ் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
முறைகேடான பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென காரில் அழைத்துச் சென்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையின் போது ரவிச்சந்திரனின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்துகொண்டனர். சுமார் 5 மணி நேரம் விசாரணை முடிந்து மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 3வது நாளாக ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரவிச்சந்திரன் இல்லத்தில் அமலாக்கத்துறை 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள TVH நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு காந்திநகரில் TVH நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் என்பவரது வீட்டிலும் ED சோதனை நடந்து வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் 'ட்ரூ டவுன்' என்னும் நிறுவனத்தின் மூலமாக, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ரூ.30 கோடி வரை கடன் வாங்கி, அந்தப் பணத்தை டி.வி.ஹெச். கட்டுமானம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் சி.பி.ஐ.வழக்குப் பதிவுசெய்து, இந்த விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications