மருத்துவமனையில் திருமாவளவன்- போன் போட்ட எடப்பாடி பழனிசாமி? வன்னியரசு வாதம் எல்லாம் வீணா?
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்த பின்னர் அதிமுக, பாஜக தரப்பில் கனத்த மவுனம் நீடிக்கிறது. தற்போதுதான் அதிமுக தரப்பில் ஒன்றிரண்டு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

அதிமுக அணியில் விசிக?: அதேநேரத்தில் அதிமுக தலைமையில் அமைய இருக்கும் புதிய கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறலாம் என்கிற விவாதம் ரெக்கை கட்டிப் பறக்கிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டும் அதிமுக அணிக்குப் போய்விடக் கூடும் என்றே பெரும்பாலான கணிப்புகளில் எழுதப்பட்டுள்ளன.
வன்னி அரசு திட்டவட்ட மறுப்பு: ஆனால் விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தார். வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினைப் போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன் அவர்கள் களமாடுகிறாரோ அப்படித்தான்
ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் அவர்கள்.

6 இடம்தான் ஆனாலும். : திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச் சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2021 ல் நடைப்பெற்ற சட்டப் பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும்,
பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.
திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம்: ஆகவே,திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே. இச்சூழலில்,பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன், விடுதலைச்சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

புரோக்கர்கள் அடிபடுவர்: பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம், இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது. இவ்வாறு வன்னி அரசு கூறியிருந்தார்.
திருமாவளவனுடன் தொலைபேசியில் எடப்பாடி பேச்சு: வன்னி அரசு இந்த பதிவைப் போட்ட சிறிது நேரத்திலேயே, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications