அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி! அதிர்ச்சியில் ஓபிஎஸ்
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுகவில் இப்போது உட்கட்சி குழப்பம் தொடர்ந்தே வருகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்றே எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவில் கடந்த சில காலமாகவே பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே, அங்குப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இடையில் சில காலம் அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டு, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.

அதிமுக
இருப்பினும், கடந்த 1.5 ஆண்டுகளாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்ட நிலையில், அதில் ஓபிஎஸ் மற்றும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். விரைவில் அவரை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

வழக்கு
இருப்பினும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான தனது அனுமதி இல்லாமல் கூடிய இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்திற்குச் சென்றது. இருப்பினும், இதில் எடப்பாடிக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமே இப்போது ஓபிஎஸுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷனாக உள்ளது. இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராகச் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அறிவிப்பு
இது ஒரு பக்கம் இருக்கும் அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியைத் தேர்வு செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. நீதிமன்றத்தில் எடப்பாடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில், நேற்றைய தினம் அதிமுகவின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதிமுக துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையாளராகவும் உள்ள நத்தம் விசுவநாதன் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பொதுச்செயலாளர் தேர்தல்
அந்த அறிவிப்பில், "வேட்பு மனுத்தாக்கல் நாளை (மார்ச் 18) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (19ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். மார்ச் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. மார்ச் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை மனுவைத் திரும்பப் பெறலாம். மார்ச் 26ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மார்ச் 27இல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஓபிஎஸ்
‛கழகப் பொதுச்செயலாளர்'' பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட கால அட்டவணைப்படி தலைமை கழகத்தில் கட்டணத்தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று கழக சட்டவிதி 20 அ பிரிவு - 1, (a) (b) (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஓபிஎஸ் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றே களமிறங்கும் எடப்பாடி
இதனிடையே பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்றே எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.. பொதுச்செயலாளராகத் தேர்வாவதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். பெரும்பாலும், இப்போது அவருக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் ஒருமனதாகவே அவர் தேர்வாக வாய்ப்புகள் அதிகம். இன்றைய தினமே எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.

அதிர்ச்சியில் ஓபிஎஸ்
இதுவரை நீதிமன்றங்களில் ஓபிஎஸுக்கு ஆதரவாக எந்தவொரு தீர்ப்பும் வரவில்லை. இதனால் அப்செட்டில் இருந்த ஓபிஸுக்கு இது அடுத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இருப்பினும். 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த தேர்தல் அறிவிப்பே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தை அணுகி இந்த விவகாரத்தில் சட்ட போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications