"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" 7 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை 7 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தமாக 34 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மக்களையும், அதிமுக நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக வேகமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டச் செயலாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார். அதில் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தி இருந்தார்.

7 மாவட்டங்கள், 34 தொகுதிகள்
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வந்தார். அது ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜூலை 7 முதல் 21 வரை 7 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
எந்த மாவட்டங்கள்?
இதன்படி கோவை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி மக்களையும், அதிமுக தொண்டர்களையும் சந்திக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணத்திற்கு "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்நாளான ஜூலை 7ஆம் தேதி மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார்.
கோவை, விழுப்புரம்
இதனைத் தொடர்ந்து ஜூலை 8ஆம் தேதியன்று கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளிலும், ஜூலை 10ஆம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய 3 தொகுதிகளிலும், ஜூலை 11ஆம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், மயிலம் மற்றும் செஞ்சி ஆகிய தொகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளார்.
கடலூர், மயிலாடுதுறை
அதேபோல் ஜூலை 12ல் கடலூர், பண்ருட்டி, நெய்வேலு ஆகிய தொகுதிகளிலும், ஜூலை 14ல் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளிலும், ஜூலை 15ஆம் தேதியன்று மயிலாடுதுறையில் உள்ள சீர்காழி, பூம்புகார் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளார்.
திருவாரூர் மாவட்டம்
பின்னர் ஜூலை 16ஆம் தேதியன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், திருவாரூர் தொகுதிகளிலும், நாகை மாவட்டத்திலும் கீழ்வேளூர் தொகுதிகளிலும் மக்களை சந்திக்கிறார். அதேபோல் ஜூலை 17ஆம் தேதியன்று நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினன்ம், வேதாரண்யம் தொகுதிகளிலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தொகுதியிலும் மக்களை சந்திக்கிறார்.
தஞ்சாவூரில் சுற்றுப்பயணம்
ஜூலை 18ல் மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதிகளிலும், ஜூலை 19ல் பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு தொகுதிகளிலும் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ஜூலை 21ஆம் தேதியான கடைசி நாளன்று ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய தொகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications