பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் இபிஎஸ்.. ஆகட்டும் பார்க்கலாம் என தயாரான டெல்லி- ஐடி ரெய்டின் பின்னணி!
சென்னை: அதிமுகவில் இபிஎஸ் கோஷ்டி பாஜகவுக்கு எதிராக களமிறங்க கூடிய சாத்தியங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளராகிவிட்ட எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை தம் வசமாக்குவது என்பதில் தீவிர சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதிமுகவின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். அதனால் எடப்பாடி தரப்பு மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது.

பாஜக ப்ளான்
ஆனால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக ஒருங்கிணைந்து இருந்தால்தான் அதன் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள முடியும் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. இதற்காக அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பாஜக முனைப்பாகவும் சில அறிவுறுத்தல்களையும் கொடுத்தும் வருகிறது.

எடப்பாடி தரப்பு முடிவு
இதனை திட்டவட்டமாக ஏற்க மறுத்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. நீதிமன்றங்களில் இனி ஓபிஎஸ் தரப்புடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கடுமையாக வாதாடுகிறது எடப்பாடி தரப்பு. சசிகலா, தினகரன் தரப்பை ஒரு பொருட்டாகவும் கருதவில்ல. சென்னையில் நடைபெற்ற அதிமுக மா.செ.க்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் தனித்தே தேர்தலை சந்திப்பது என பேசியிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி கோஷ்டியானது பாஜகவை எதிர்ப்பது என்ற முடிவோடுதான் இருக்கிறதாம்.

பாஜக உறவு முறிவு?
அதனால்தான் எடப்பாடி முகாம் மாஜிக்கள், பாஜகவுடனான உறவை துண்டிப்பது தொடர்பாக பேச தொடங்கி உள்ளனர். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் திமுக எதிர்ப்பில் உறுதியாக நின்றால் போதும்; மக்கள் ஆதரவை தக்க வைக்க முடியும் என கணக்கிடுகிறார். திமுகவை எதிர்க்க பாஜக தயவு தேவை இல்லையே என்பதும் அவரது நிலைப்பாடாக இருக்கிறதாம். இருந்த போதும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு சீனியர்கள் சிலர் மீதான வழக்குகள் தீவிரமாகுமோ என்கிற கவலையும் அந்த தரப்பிடம் இருந்ததாம்.

அதிரடி ஐடி ரெய்டு
இந்நிலையில் எடப்பாடி தரப்பு எதிர்பார்த்தது போலவே, அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நெடுஞ்சாலை துறையில் கொடிகட்டிப் பறந்தவர்களில் பாண்டித்துரையும் ஒருவர். அதனால்தான் இப்போது ஐடி ரெய்டு வலையில் சிக்கி இருக்கிறாராம். இருந்தபோதும் பாஜகவுக்கு எதிராக எடப்பாடி களமிறங்குகிறாரா என செய்திகள் வெளியான வேகத்திலேயே வருமான வரித்துறையும் களமிறங்கி இருப்பதுதான் இப்போது அதிமுகவில் சூடாக விவாதிக்கப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications