விஜயை விமர்சிக்க அதிமுகவினருக்கு தடை.. அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்? சூசகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி
சென்னை: தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை தீவிரப்படுத்த எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ள நிலையில், தொண்டர்கள் விரும்பியதை போல் மெகா கூட்டணி அமைக்கப்படும், நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

அதிமுக ஆலோசனை
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் குறித்து 82 மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுடன் பல்வேறு அமர்வுகளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் நாள் கூட்டத்தில் ஜூன் மாதம் இறுதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விஜயை விமர்சிக்க தடை
இந்த நிலையில் 2வது நாள் ஆலோசனை கூட்டம் இன்று அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கி இருக்கிறார். அதில், விஜய் மற்றும் தவெகவை விமர்சிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு தடை விதித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
அதற்கு பதிலாக திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை அதிகரிக்கவும், குறிப்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனங்களை அதிகரிக்கவும் அறிவுறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் தொண்டர்கள் விரும்பியதை போல அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும், அதற்கேற்ப நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
அதிமுக - பாஜக - தவெக
இதனால் அதிமுக கூட்டணிக்குள் தவெக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிப்பதே கிடையாது. இதே அணுகுமுறையை அதிமுகவும் கையில் எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2 நாட்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சகோதரர் விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
கூட்டணி அமையுமா?
அதே கருத்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் வலியுறுத்தி இருந்தார். இதனால் அதிமுக - தவெக - பாஜக கூட்டணி இணையுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி விஜய் மீதான விமர்சனங்களுக்கு தடை விதித்திருப்பதால், அந்த கூட்டணி இன்னும் சில மாதங்களில் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications