நெருங்கும் புயல்.. டெல்டா விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்! பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது விரைவில் புயலாக மாறலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர்க்காப்பீடு கால அவகாசம் டிச.1 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வழக்கமாக நவ.15ம் தேதியுடன் பயிர்க்காப்பீடு முடிந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு சம்பா, தாளடி நடவு தாமதமாகவே தொடங்கப்பட்டது. எனவே, காப்பீடு கால அவகாசம் டிச.1 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

எல்-நினோ தாக்கத்தால் பருவமழை அளவில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, பல மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் தேசிய பயிர்க்காப்பீட்டு வலைதளத்தில் ஏற்பட்ட சர்வர் பிரச்சனைகளால் விவசாயிகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்ய முடியவில்லை.
எனவே பயிர்க்காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று.. மத்திய அரசுக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று.. தற்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் சுமார் 28 மாவட்டங்களை சேர்ந்த சம்பா, தாளடி மற்றும் பிசானம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த நீட்டிப்பால் பயன்பெறுவார்கள். அதேபோல பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5% மட்டுமே பிரீமியமாக செலுத்த வேண்டும். இது ஒரு ஏக்கருக்கு தோராயமாக ரூ.584 வரை இருக்கும்.
எனவே விவசாயிகள் கடைசி நேர நெரிசலை தவிர்க்க உடனடியாக தங்கள் அருகிலுள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வணிக வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா மற்றும் சிட்டா ஆகிய ஆவணங்கள் தேவை. கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்புப் பருவத்திற்கான அடங்கல் அல்லது சாகுபடி சான்றிதழ் அவசியம்.



Click it and Unblock the Notifications
