பாஜகவில் இணைகிறாரா ரமேஷ் பிரபா? மத்திய மாவட்டத்தில் சீட் உறுதி? - அவரே சொன்ன பரபர தகவல்!
சென்னை : கல்வியாளர் ரமேஷ் பிரபா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுபற்றி ரமேஷ் பிரபா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் முகாமிட்டுள்ள பாஜக முன்னணி தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா முன்னிலையில், ரமேஷ் பிரபா, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
முன்னணி நிகழ்ச்சி தயாரிப்பாளராக, தமிழகத்தில் பெரும்பாலானோருக்கும் அறிமுகமான ரமேஷ் பிரபா, கல்வி ஆலோசகராகவும் விளங்குகிறார். கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் வலுவாக தடம் பதிக்க பிரபலமானவர்கள் பலரையும் தங்கள் பக்கம் பாஜக இழுத்து வரும் நிலையில், இன்று ரமேஷ் பிரபா பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்ப்பட்டது. இதுகுறித்துப் பேசியுள்ள ரமேஷ் பிரபா, பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் இன்று தான் பாஜகவில் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக திட்டம்
பாஜக தனது கட்சியை இந்தியா முழுவதும் வலிமையாக நிலை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வட மாநிலங்கள் பலவற்றில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி வலுவாக அடித்தளம் போட்டுள்ள பாஜக, தென் மாநிலங்களைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளது. வரும் எம்.பி தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற பாஜக போராடி வருகிறது. இதற்கான மூவ்களில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது பாஜக தலைமை. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமானவர்கள், மாற்றுக் கட்சிகளில் உள்ள அரசியல் புள்ளிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது பாஜக.

தமிழ்நாட்டில் குறி
அதிமுகவில் உள்ள இரு பிரிவுகளான எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இப்போதே பாஜக கட்டுபாட்டில்தான் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா என பாஜக தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் மீண்டும் தமிழகத்தில் முகாமிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

சென்னையில் அமித்ஷா
சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வருகை தந்தார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்தார். தொடர்ந்து இன்று இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பாஜகவில் இணையும் புள்ளி
பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றார் அமித்ஷா. அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் அமித்ஷா. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், கட்சிப் பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகம் பெற்ற பிரபலமான ரமேஷ் பிரபா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்தன.

ரமேஷ் பிரபா
கல்வியாளரான ரமேஷ் பிரபா, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக இன்று காலை முதலே தகவல்கள் கசிந்து வந்தன. கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் வழங்கி வந்த ரமேஷ் பிரபா, கல்வி ஆலோசகராக இருக்கிறார். கேலக்ஸி என்ற பெயரில் மேலாண்மைக் கல்லூரியையும் நடத்தி வருகிறார் ரமேஷ் பிரபா. இந்நிலையில், அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.

பிரபலம்
சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, நிகழ்ச்சி தயாரிப்பாளரானார் ரமேஷ் பிரபா. பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். தொடர்ந்து, கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது சன் டிவியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றுச் செயல்பட்டார். 11 மாதங்கள் அங்கு தலைமைப் பதவியில் இருந்த ரமேஷ் பிரபா பின்னர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் பிரபா விளக்கம்
மாணவர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள கல்வியாளர் ரமேஷ் பிரபாவை பாஜகவில் இணைப்பதன் மூலம், கட்சியை வலுப்படுத்தவும், வரும் எம்.பி தேர்தலில் அவரைப் போட்டியிட வைக்கவும் பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இன்று அமித்ஷா முன்னிலையில் ரமேஷ் பிரபா பாஜகவில் இணைவதாக தகவல் கசிந்த நிலையில், செய்தி ஊடகம் ஒன்றிற்கு இதுகுறித்துப் பேசியுள்ள ரமேஷ் பிரபா, "பாஜகவுடன் பேச்சுவாரத்தை நடந்து வருகிறது, ஆனால், இன்று நான் பாஜகவில் இணையவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications