வெறும் கறி இல்ல தியாகம்.. பக்ரித் அன்று முஸ்லிம்கள் கால்நடைகளை பலியிடுவது ஏன்? நரபலி ஒழித்த குர்பானி
சென்னை: நாளை தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பக்ரீத் எனப்படும் ஹஜ் பெருநாளை கொண்டாட இருக்கும் நிலையில், இந்த பண்டிகையை ஏன் இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர் என்ற விளக்கத்தை பார்ப்போம்.
சென்னை: இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை அன்று ஆடு, மாடு, ஒட்டங்களை பலியிட்டு குர்பானி கொடுப்பது ஏன்? விரிவாக பார்ப்போம்.
ஆண்டுதோறும் துல் ஹஜ் மாதம் பிறை 10 ல் இஸ்லாமியர்கள் 5 கடமைகளுள் ஒன்றான ஹஜ் பயணத்தை மேற்கொண்டிருக்கும்போது ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஹஜ் பெருநாள் என்றாலே நம்மில் பலரும் நினைவுக்கு வருவது ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிடுவதுதான். இந்தியாவில் ஒட்டங்களை பலியிடுவது தடை செய்யப்பட்டு இருக்கிறது.
எனவே ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டு முஸ்லிம்கள் குர்பானி கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு குர்பானி கொடுப்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்று இருக்கும் தியாக சம்பவம் காரணமாக கூறப்படுகிறது. முஹம்மது நபிகளின் மூதாதையர்களான இப்ராஹிம் நபி மற்றும் அவரது மகன் இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகங்களை நினைவு கூரும் வகையிலேயே இந்த குர்பானி கொடுக்கப்படுகிறது.

அல்லாஹ்வின் கடைசி தூதரான முஹம்மது நபி பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தூதர் இப்ராஹிம் நபி மற்றும் அவரது மனைவி ஹாஜிரா பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். தொடர் பிரார்த்தனைகளுக்கு பிறகு வயோதிகமான காலத்தில் இப்ராஹிம் நபிக்கு இஸ்மாயில் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் அல்லாஹ்வின் தூதர்தான்.
இப்படி தவம் கிடந்து பெற்ற புதல்வர் இஸ்மாயீலை தியாகம் செய்வதைபோல் இப்ராஹிம் நபி கனவு கண்டார். இது அல்லாவின் விருப்பமாக இருக்கும் என்று நம்பிய அவர், சிறுவரான தனது மகன் இஸ்மாயீலிடம் இதை தெரிவித்து உள்ளார். உடனே இஸ்மாயீலும் அல்லாஹ் கொடுத்த உயிரை அவனுக்காகவே தருகிறேன் என்று சொல்லி தந்தையின் வேண்டுகோளை ஏற்றார்.
அதன் பின்னர் இப்ராஹிம் நபி கனத்த இதயத்துடன் மகன் இஸ்மாயில் கழுத்தில் கத்தியை வைத்து பலியிட முயன்றபோது கழுத்து அறுபடவில்லை. உடனே அல்லா, இப்ராஹிமே நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டீர்கள் என்று கூறி ஒரு ஆட்டை இறக்கி அதனை பலியிட சொன்னான்.
அல்லாஹ்வுக்காக இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி ஆகியோர் செய்ய துணிந்த தியாகத்தை உலகின் இறுதி நாள் வரை நினைவுகூரும் வகையில் தியாகத் திருநாள் கொண்டாடப்பட்டு அன்றைய தினம் குர்பானி கொடுக்கப்படுகிறது. இதுபற்றி அல்லாஹ் குர்ஆனில், "உமது இறைவனுக்காகத் தொழுது மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக. - அல்குர்ஆன் 108:2" என்று கூறுகிறாம்.
இதற்கு முந்தைய காலம் வரை நரபலி என்பது அரபு நாடுகளில் சாதாரணமான விசயமாக இருந்தது. ஆனால், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தால் நரபலி என்பதே முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை கொண்டு குர்பானி கொடுக்க இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது.
பெருநாளை சில நாட்களுக்கு முன்பே குர்பானி கொடுக்கப்போகும் கால் நடைகளை வாங்கி வீட்டில் தீனி போட்டு, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள் முஸ்லிம்கள். குர்பானியை முன்னிட்டு ஹலால் முறையில் ஆடு, மாடுகளின் கழுத்தில் அறுத்து பலியிடப்படுகின்றன. குர்பானி கொடுப்பவர்களே அதை அறுக்க வேண்டும் என்றும், அறுக்க தெரியாவிட்டால் தெரிந்தவர்களை அழைத்து அறுக்க சொல்லி அதன் அருகில் நிற்க வேண்டும்.
ஒற்றைக் கண் பார்வை இல்லாதது, வியாதியுடையது, கால் ஊனமுற்றது, கிழட்டுப் பருவம் அடைந்தது ஆகிய பிராணிகள் குர்பானிக்கு ஏற்றவையல்ல என்று நபி நாயகம் கூறியுள்ளார்கள். ஒரு குடும்பத்துக்கு ஒரு கால் நடை குர்பானி கொடுக்க போதுமானது என்றும், அதன் தோலை அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்ற விதியும் உள்ளது.
பலியிடப்பட்ட கால் நடையின் இறைச்சியை சொந்த தேவைக்காகவும், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இந்த குர்பானி குறித்து குர்ஆனின் 22:37 வது வசனத்தில், "குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய பயபக்தி தான் அவனை அடையும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications