விடாது விரட்டும் இரட்டைத்தலைமை சர்ச்சை..பூமராங் ஆகும் தேர்தல் ஆணையத்தின் கடிதம்
சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுக அலுவலகத்திற்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கடிதத்தினால் அதிமுகவில் மீண்டும் இரட்டைத்தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. நான்தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாலும் ஓ.பன்னீர் செல்வம் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே தற்போது கடிதம் எழுதப்பட்டுள்ளது.
லோக்சபா, சட்டசபைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ஆர்.வி.எம் எனப்படும் ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுதொடர்பாக வருகிற 16ஆம் தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அம்மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக, தேமுதிக, ஐயுஎம்எல், பாமக கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.
ஏற்கெனவே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சினையால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பழனிசாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விபரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி நிர்வாகிகளை நியமனம் செய்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் இந்தச் சூழலில், அதிமுகவுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இருந்தது.
இதை ஓபிஎஸ் தரப்பு வரவேற்ற நிலையில், பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், கடிதம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ கூறும்போது, தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது என தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியது.
தலைமை தேர்தல் ஆணைய ஆணைகளின்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டதாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில அதே கடிதத்தை மீண்டும் அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை பற்ற வைத்த நிலையில் இரட்டை தலைமை சர்ச்சையை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் கடிதம்.












Click it and Unblock the Notifications