2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்.. புதிய வாக்காளர்களே.. இதை கட்டாயம் படிங்க
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

2024 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலி்ல் சேர்ப்பதை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். அதன்பின், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை, வாக்குச் சாவடிகளை திருத்தியமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல். வாக்காளர் பட்டியலிலுள்ள மங்கலான, மோசமான, தரமற்ற, படங்களை மாற்றுதல், பிரிவு அல்லது பகுதிகள், வாக்குச்சாவடி எல்லைகள் மறு சீரமைப்பு, இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் அத்தகைய இடைவெளிகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் காலக்கெடுவையும் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளின் போது தகுதியான வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கலாம். அல்லது, பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றுக்கு படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம்.
இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 17ஆம் தேதியன்று வெளியிடப்படும். அன்றிலிருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது வரும் டிசம்பர் 26ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications