50,000 மேல் பணம் இருந்தால் பறிமுதல்.. அவசர தேவைக்கு என்ன செய்ய வேண்டும்? தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. தமிழகம் முழுக்க தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் தீவிர சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதியின் படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
இதனால் மருத்துவம் போன்ற அவசர தேவைக்காக ரூ.50 ஆயிரத்திற்கு மேலும் பணம் எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பன்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கையில் ரொக்கமாக 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல வேண்டும் என்றால் உரிய ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்து விடுவார்கள்.
அர்ச்சனா பட்நாயக் விளக்கம்
உரிய ஆவணங்கள் சமர்பித்தால் மட்டுமே இந்த தொகை திருப்பி அளிக்கப்படும். அவசர காலங்களில் மருத்துவம் மற்றும் கல்வி செலவுகளுக்காக பணம் எடுத்து செல்லும் சாதாரண மக்கள் கையில் பணம் அதிகமாக வைத்து இருந்தால் இதுபோன்ற நேரங்களில் பணம் பறிமுதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அர்ச்சனா பட்நாயக், விதிகள் அமலில் உள்ளன. ஒரு அளவுக்கு மேல் பணம் கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஆவணங்கள் தேவை. ஆவணங்கள் இருந்தால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்" என்றார்.
இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும்
அதாவது 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் எதற்காக கொண்டு செல்கிறோம் என்பதற்கான உரிய ஆவணங்களை கையில் இருந்தால் எந்த அச்சமும் இன்றி எடுத்து செல்லலாம் என்பதே இதன் அர்த்தமாகும். இல்லையென்றால் அந்த பணம் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும்.
10 லட்சத்திற்கு மேலான தொகையாக இருந்தால் வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தேர்தல் காலம் என்பதால் கையில் அதிக பணம் எடுத்துச் செல்ல வேண்டியது இருந்தால் ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
வங்கியில் இருந்து பணம் எடுத்திருந்தால்
மக்கள் கூடுமனவரை தங்கள் கைகளில் ரொக்கமாக அதிக அளவு பணம் எடுத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற சிரமத்தை இது தவிர்க்க உதவும். கட்டாயம் பணம் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
வங்கியில் இருந்து பணம் எடுத்திருந்தால் உங்களின் வங்கி கணக்கில் இருந்து எடுத்ததற்கான ஆவணம் காட்ட வேண்டும். மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்கிறீர்கள் எனும் போது மருத்துவமனை சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்" என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications