கல்வி தொலைக்காட்சி சிஇஓ பணிக்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை: கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்ட பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் முதல்வரை கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படுமென்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Recommended Video
தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் இலவச தொலைக்காட்சி சேனல் 'கல்வி'. இந்த தொலைக்காட்சியின் மூலம், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில், 2019 ஆகஸ்ட் மாதத்தில் கல்வி தொலைக்காட்சி தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதில் அவரவர்களுக்கு உரிய பாடதிட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

கல்வி தொலைக்காட்சி
கல்வி தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளே நிர்வகித்து வந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்து, அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சி.இ.ஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மே 28 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஏமாந்து விட்டோம்
அதைத் தொடர்ந்து, இந்தப் பணிக்கு வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு இந்தப் பொறுப்புக்கு மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சர்ச்சை எழுந்துள்ளதால் அந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்து விடமாட்டோம். அனைத்து விஷயங்களிலும் கவனமாக செயல்படுகிறேன் என்று கூறியிருந்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கல்வித்துறையில் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் மாவட்ட அளவில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இயக்குனர், இணை இயக்குனர்கள் அளவிலான வழக்கமான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது.

மணிகண்ட பூபதி பின்புலம்
கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மணிகண்ட பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவரின் பின்புலம் குறித்து ஆராய கூடிய பணி நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது அவரைப் பற்றிய பின்புலம் முழுமையாக தெரிந்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்
அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்கள் கொடுத்துவிடப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications