குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை.. ஷாக்.. கொந்தளித்த எடப்பாடி!
சென்னை: டெல்லியில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாத நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்; திமுக அரசின் தொடர் அலட்சியத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் கடும் கண்டனம் எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.

அலங்கார ஊர்தி அணிவகுப்பு
அலங்கார அணிவகுப்புக்கு சுழற்சி முறையில் மாநிலங்கள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு மாநிலங்களும் அலங்கார ஊர்தி மாதிரிகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். அதனை பரிசீலித்து மத்திய அரசின் தேர்வுக்குழு, அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் பட்டியலை வெளியிடும். எதிர்வரும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஆண்டுக்கான குடியரசு தின அணிவகுப்பில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, டெல்லி அரசுகளின் அலங்கார ஊர்திகள் இடம்பெறவில்லை, 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊர்தி புறக்கணிப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் புகழை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்தி, மத்திய அராசால் தேர்வு செய்யப்படவில்லை. இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக்கொள்ள செய்ததோடு, மாநிலம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த அணிவகுப்பில் குடவோலை முறையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றது. அப்போது 'குடவோலை கண்ட தமிழ்க் குடியே வாழிய வாழியவே' என்ற பாடலுடன் ஊர்தி அணிவகுப்பாகச் சென்றது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்நிலையில், வரும் ஜனவரி 26ல் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என தகவல் வந்துள்ளது குறித்து, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.
ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். மு.க. ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications