ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர்..ஓபிஎஸ் தரப்புக்கும் செல்லும் ஒப்புதல் படிவம்.. பரபர எம்ஜிஆர் மாளிகை

வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Erode East AIADMK candidate: Distribution of approval form at AIADMK office

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னாள் எம்எல்ஏ தென்னரசும், அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் தனித்தனியாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.

இதனையடுத்து தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவும் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி புதிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் நேற்று முன்தினம் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேற்கண்ட இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக ஒருவர் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சின்னத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எங்களால் எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான குருகிருஷ்ணகுமார், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். மேலும் வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் ஒங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஈரோடு இடைத்தேர்லில் வேட்பாளர் விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டால் அதனை போடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் எங்களை நிராகரிக்கிறார்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமாசுந்தரம், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,அதிமுகவை பொறுத்தமட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியில் பொதுக்குழுவே வேட்பாளரை முடிவு செய்யும். மேலும் பொதுக்குழு கூட்டப்படும் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

நேரமின்மை காரணமாக ஒரு வேளை பொதுக்குழுவை திடீரென கூட்ட முடியவில்லை என்றால் வேட்பாளர் பெயரை சர்குலேஷன் முறையில் அதாவது தீர்மானத்தை சுற்றுக்கு விட்டு முடிவு செய்யலாம். இதையடுத்து இறுதி செய்யப்படும் வேட்பாளரின் பெயரை கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு இடைதேர்தலுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

இந்த உத்தரவை அடுத்து இரண்டு அணி முகாமிலும் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத் செம்மலை, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவும், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட வாரியாக வேட்பாளர் தென்னரசுவுக்கான ஆதரவுக் கடிதம் பெற திட்டம் இபிஎஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 2 நாட்களில் இப்பணியை செய்து திங்கள் அன்று நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் ஒப்புதல் படிவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும் என்றும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவங்களில் கையெழுத்து போட்டு நாளை இரவுக்குள் திரும்பி அனுப்ப வேண்டும் என்றும் நாளை மறுநாள் திங்கட்கிழமையன்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஒப்புதல் படிவத்தை வழங்க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளதால் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை மீண்டும் பரபரப்படைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+