நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது கை வைக்கவேண்டாம்- கை சின்னத்தில் மை வைத்தால் போதும்: கமல்ஹாசன்
நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது கை வைக்கவேண்டாம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்
சென்னை: நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது கை வைக்க வேண்டாம்; ஈரோடு கிழக்கு தொகுதியில் கை சின்னத்தில் மை வைத்தால் போதும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். பிரம்மாண்டமாக திரண்ட பொதுமக்கள் மத்திய கமல்ஹாசன் பேசினார். அப்போது, நாட்டுக்கு ஆபத்து என்கிற போது சின்னங்களைத் தாண்டி யோசிக்க வேண்டியது உள்ளது. அதனால் நன்றாக யோசித்துவிட்டே பிரசாரத்துக்கு வந்துள்ளேன்.

எனக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. இளங்கோவன் பெரியாரின் பேரன்; பெரியாரே ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நான் அவர் பேரன். பெரியாரால் அந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டவன் நான். இந்த கூட்டணி எதற்கு? லாபத்துக்காகவா? என கேட்கிறார்கள். என்னுடைய தொழில் எனக்கு லாபத்தை ஈட்டித் தருகிறது. இங்கே வந்தது லாபத்துக்கு அல்ல- கடமையை செய்யத்தான். நாட்டுக்கான கடமையை செய்ய வேண்டும். தமிழர்கள் தன்மானத்தை நிரூபிக்க காங்கிரஸின் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

என்னைப் போல நீங்களும் சிந்திக்க வேண்டும்; தமிழ்நாடு என்பது தனி சிந்தனை கொண்ட நாடு. இதனை நிரூபிக்க தருணம் வந்துள்ளது. அந்த வாய்ப்பை காலமும் கழகமும் வழங்கி இருக்கிறது என கூறியிருந்தார் கமல்ஹாசன்.
மேலும் விஸ்வரூபம் பட விவகாரத்தில் ஜெயலலிதா தம்மை அவமதித்ததையும் கமல்ஹாசன் இந்த பிரசாரத்தின் போது சுட்டிக்காட்டி இருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் இன்று பதிவிட்டுள்ளதாவது: நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்! இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications