"அரசு முறை பயணமா? அரசர் முறை பயணமா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை!" விளாசும் ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிலாளர் போராட்டம், நீட் விலக்கு என எல்லா விஷயங்களிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் கள்ள ஓட்டுப் போட வந்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருந்தார். இதில் ஜெயக்குமாருக்கு பல்வேறு நிபந்தனைகள் உடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.

 ஜெயக்குமார் சாடல்

ஜெயக்குமார் சாடல்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "திமுகவைப் பொறுத்தவரையில் தொழிலாளர் விரோத போக்கு, அரசு ஊழியர் விரோத போக்கு என்ற இரட்டை நிலையைக் கொண்டுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள். தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். கட்சியில் இருப்பவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள். எனவே இதில் ஒரு தெளிவான நிலை இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் கழகத்தின் சார்பில் ஏற்கனவே தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதிகளை அளித்தோம். அதாவது பழைய பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நிறைவேற்றுவோம் என்று திமுகவினர் சொன்னார்கள். ஆனால் அந்த கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாக இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. நாளையும் நிறைவேற்றப் போவதில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.

 சம்பளப் பிரச்சனை

சம்பளப் பிரச்சனை

அது மட்டுமல்ல மின்சார வாரியத்தில் தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தவுடன் பல சலுகைகள் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்றார்கள். ஊழியர் பற்றாக்குறையை உடனடியாகப் போக்குவோம் என்றார்கள். இன்றைக்கு அதன்மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்கள் பற்றாக் குறையோடு மின்வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய பணப்பலன்களைக் கொடுப்பதற்கு இந்த அரசு தயாராக இல்லை. எங்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் பலமுறை சம்பளப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது இறுதி செய்யப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 9 மாதங்கள் ஆகியும்கூட சம்பளப் பிரச்சனை குறித்து இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தையும் தொடங்கப் படவில்லை.

 தொழிலாளர் விரோதப் போக்கு

தொழிலாளர் விரோதப் போக்கு

அதுபோல ஓய்வூதியப் பலன்கள் என்ன ஆயிற்று? போக்குவரத்துத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கொள் மீதும் இன்றுவரை எதுவும் செய்யவில்லை. உதிரிப்பாகங்கள் கூட பணிமனைகளில்ல இல்லை. காலம் காலமாக ஒட்டுநருக்கும், நடத்துநருக்கும் பேட்டா கொடுப்பது வழக்கம். பெண்கள் பயணம்செய்யும் பேருந்தில் பேட்டா கொடுப்பதில்லை. இப்படி முழுக்க, முழுக்க திமுக அரசு தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. விடியா திமுக அரசின் செயல்பாடாக இதுதான் இருந்து வருகிறது. இதனால் இந்த அரசு மீது தொழிலாளர்களுக்குக் கோபம் உண்டாகியுள்ளது.

 பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

தற்போது மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முழுக்க, முழுக்க இந்த மாநில அரசு, தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில் இப்போது போராட்டம் நடத்தும் தொழிற்சங்கங்கள் ஏன் மாநில அரசு குறித்து வாயைத் திறக்கவில்லை. இதுதான் எங்களுடைய கேள்வி? மாநில அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதால் நாங்கள் இதில் கலந்து கொண்டுள்ளோம். பெட்ரோல், டீசலைப் பொறுத்தவரையில் மத்திய அரசு டீசலில் 10 ரூபாய் குறைத்தது. பெட்ரோலில் 5 ரூபாய் குறைத்தது. பெட்ரோல், டீசலைப் பொறுத்தவரையில் ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் உடனடியாக விலையைக் குறைப்போம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 9 மாதம் ஆகிவிட்டது. பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. டீசல் இப்போது 100 ரூபாயை எட்டப்போகிறது. டீசலால் சுமையுந்துகள், விசைப்படகுகள் போன்ற எண்ணற்றத் தொழில்கள் டீசலைச்சார்ந்து இருப்பதால், மத்திய அரசு விலை குறைத்தவுடன் மாநில அரசு குறைத்திருந்தால் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சுமைகள் குறைந்திருக்கும், டீசல் விலை ஏறினால் விலைவாசி ஏறும். இதனால் பொதுமக்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும்.

 நகைக்கடன் ஏமாற்று வித்தை

நகைக்கடன் ஏமாற்று வித்தை

மாநில அரசைப் பொறுத்தவரையில் டீசல் விலையைக் குறைப்பதுதான் நல்ல தீர்வு. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், மாநில அரசு இன்றும் வாய் மூடி மவுனியாக உள்ளது. விலைவாசியைத் தீர்மானிப்பது டீசல்தான். டீசல் விலைக் குறைப்பைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 100 ரூபாய் கேஸ் மானியம் தருவேன் என்று சொன்னார்கள். இன்னும் தரவில்லை. இந்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். கல்விக்கடன் ரத்து என்றார்கள். எத்தனைப் பேருக்குக் கல்விக்கடனை ரத்து செய்துள்ளார்கள். விவசாயக்கடன் தள்ளுபடி என்றார்கள். அது என்ன ஆயிற்று. நகைக்கடனைப் பொறுத்தவரை 35 லட்சம் பேரைத் தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். 13 லட்சம் பேரை ஆய்வு செய்கிறோம், ஆய்வு செய்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள். இதுவும் ஒரு ஏமாற்று வித்தைதான்.

 அரசர் முறை பயணம்

அரசர் முறை பயணம்

கோபாலபுரத்து ஆக்டோபஸ்கள் 10 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.பொதுமக்கள், ஊடகங்களில் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். அரசுமுறை பயணமா, அரசர் முறை பயணமா? இதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது. முதலீட்டை ஈர்க்கவா, முதலீட்டைச் செய்யவா? இதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாகவும் எதிரொலிக்கிறது. எடப்பாடியார் வெளிநாடுகளுக்குச் சென்று ஏறக்குறைய 8 ஆயிரம் கோடிக்கு மேலே தமிழகத்திற்குத் தொழில் முதலீட்டைக் கொண்டுவந்தார். ஆனால் இவர்களைப் பொறுத்தவரை 2 ஆயிரத்து 700 கோடி என்று சொல்கிறார்கள். இவர்களின் பயணம் குறித்துப் பல சர்ச்சைகள் உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு விமானம் இல்லாத காரணத்தினால்தான் சிறப்பு விமானத்தில் சென்றதாகக் கூறுகிறார். கிட்டத்தட்ட 14 விமானங்கள் அன்று இருந்துள்ளது. தேடிப்பாருங்கள். எவ்வளவு பெரிய உண்மையை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைத் தொழில்துறை அமைச்சர் செய்துள்ளார் என்பது தெரியவரும். இந்தக்குடும்ப சுற்றுப்பயண செலவை திமுக ஏற்கிறது என்கிறார். அரசர் முறை பயணத்தின் செலவை திமுக ஏற்கிறது என்றால் திமுக ஒரு குடும்பக்கட்சி என்பதைத்தான் தங்கம் தென்னரசு உறுதிப் படுத்தியுள்ளார். இதுதான் உண்மை.

 நீட் விவகாரம்

நீட் விவகாரம்

நீட் தேர்வில் எங்களைப் பொறுத்தவரையில் ஒரே நிலைதான், தமிழகத்திற்கு நீட் தேவையில்லை. ஆனால், இவர்கள் என்ன சொன்னார்கள். எங்களுக்குத்தான் அதன் சூட்சுமம் தெரியும். வித்தை தெரியும் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு நாங்கள் என்ன வழியைக் கையாண்டோமே,அதனைத்தான் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அன்றே சட்டப் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். அதேபோன்று மாணவர்களைத் தயார்ப் படுத்தினோம். இரண்டு தண்டவாளங்கள் போன்று நாங்கள் இந்தப் பணிகளைச் செய்தோம். ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில் நம்பவைத்து கழுத்தை அறுத்த கதையாக மாணவ, மாணவிகளை முழுமையாக ஏமாற்றியுள்ளார்கள். இதை ஒரு ஏமாற்று செயலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். விலாங்குமீன் பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும். அதுபோலத்தான் அனைத்திலும் திமுக இரட்டை வேடம் போட்டுவருகிறது. பாஜகவையும் அழைப்பார்களாம், காங்கிரஸ் கட்சியையும் அழைப்பார்களாம்- எப்படிப்பட்ட இரட்டை வேடம் பாருங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+