அண்ணாமலைக்கு ஜாதி வெறி.. அசிங்கமா இருக்கு.. பாஜகவிலிருந்து வெளியேறுவேன்.. எஸ்.வி.சேகர் பரபரப்பு
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை. அவருக்கு ஜாதி வெறி இருக்கிறது என முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2009 ஆம் ஆண்டு முதல் அதாவது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதிலிருந்தே பாஜகவுக்காக பெரிய அளவில் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தேன். இப்போது நான் நினைத்த மாதிரியான இடத்திற்கு பாஜக வந்து சேர்ந்திருக்கிறதா என்றால், பாஜக நினைக்கிற இடத்தில் இருக்கு. ஆனா வந்து சேர்ந்திருக்கிறதா என சொல்ல முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ 2026 சட்டசபை தேர்தலிலோ பாஜகவின் வளர்ச்சி தெரிய வரும்.

முக்கிய காரணம்: தமிழகத்தில் நிச்சயமாக பாஜக வளர்ந்திருக்கு. அதற்கு முக்கியமான காரணம் மோடியின் இமேஜ்தான். தமிழக பாஜகவுக்கு தலைவராக வரும் ஒவ்வொருத்தருமே என்னை தவிர்த்து வர தொடங்கினார்கள். 1989 ஆம் ஆண்டு முதல் நான் பாஜகவின் அனுதாபியாக இருந்தேன். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை அதிமுகவிற்கு அழைத்தார். என்னுடைய திறமையின் மீது 100 சதவீத நம்பிக்கையை வைத்திருந்தார். தமிழக பாஜகவில் யார் வேண்டும் என்பதை விட யார் வேண்டாம் என தீர்மானம் செய்யும் அடிப்படையான புரிதலுடன்தான் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் நான் பிரதமர் மோடியிடமே தெரிவித்தேன். ஆனால் அவரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள் என்றார்.

திமுகவுக்கு எதிராக குறை: எனக்கு சுயமரியாதைதான் முக்கியம். என்னுடைய நேர்மை கூட தமிழக பாஜகவினருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் திமுகவுக்கு எதிராக குறைகளையே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? இவர் பாஜகவுக்கு என்ன செய்திருக்கிறார். அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் கிடையாது. நான் போனில் அப்பாயிண்மென்ட் கேட்டு அன்றைய தினம் போன் செய்தால் கூட எடுக்காதவர் அண்ணாமலை. மோடி, கலைஞர், ஜெயலலிதா ஆகியோரெல்லாம் என்னிடம் போனில் பேசியுள்ளனர். அவர்களைவிடவா அண்ணாமலை பெரிய ஆள்?
பயத்தில் சொல்கிறார் : இவர் தோசை சுட வந்திருப்பதாக யாராவது நினைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் நான் அதற்காக வரவில்லை என உளறுகிறார். அண்ணாமலை இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. பிராமணர் அல்லாத தலைவர் என்பதாலேயே அண்ணாமலை கட்டம் கட்டப்படுகிறார் என்பது தவறான கருத்து. அவருக்கு பிராமணர்களை பிடிக்கவில்லை என்று கூட இருக்கலாமே. பிராமணர்கள் 3 சதவீதம் மட்டுமே இருந்தாலும் அவர்களை ஏன் கட்சியில் வளரவிடணும் என நினைக்கிறார் அண்ணாமலை.

ஜாதி வெறி: அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருக்கிறது. இது விரைவில் நிரூபணமாகும். தமிழகத்தில் பிராமணர்களுக்கென ஒரு கட்சியை தொடங்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இடஒதுக்கீட்டில் கூட பிராமணர்களுக்கு ஒன்றுமே இல்லை. பாஜக பிராமணர்களால் வளரப்பட்ட கட்சி. அதிகபட்ச வாக்கு வங்கியை பாஜகவுக்கு பிராமணர்கள் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் ஆடியோ, வீடியோ கலாச்சாரம் அசிங்கமாக இருக்கிறது. ஒருவருக்கு தெரியாமல் எடுக்கும் வீடியோ, ஆடியோவை வெளியிடுவது தவறு.
திமுக மீது ஊழல்: மத்திய அரசான நம்மிடம் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் இருக்கும் போது திமுக மீதான ஊழல் புகார்களை அங்கு போய் கொடுக்காமல் வீடியோ, ஆடியோவாக வெளியிட்டு என்ன பயன்? அண்ணாமலைக்கு டிஜிபியாகவாக இருந்தார். அவர் கர்நாடகாவில் அவரை போல 400 ரேங்க் அதிகாரிகளில் அவர் ஒருவர். பிஎல் சந்தோஷின் ஆதரவில் அவர் பாஜகவுக்கு வந்தார். தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு முதல்வராக அண்ணாமலைக்கு தகுதி இருப்பதாக சொன்னால் வார் ரூமில் எக்ஸ்ட்ரா பேமென்ட் என்று அர்த்தம்.
நேரம் கொடுக்காத முதல்வர்: ஒருவரால் இரு வார்டுகளுக்கு கவுன்சிலராகக் கூட முடியாது. அப்படியிருக்கும் போது எப்படி இரு மாநிலங்களுக்கு முதல்வராக முடியும். இவர் நின்ற தேர்தலில் கூட தோற்றுவிட்டார். இதெல்லாம் முட்டாள்தனம். முதல்வர் ஸ்டாலின் என்னுடைய நண்பர் என நான் சொன்னால் போதாது. அவரிடம் இரு முறை அப்பாயிண்ட்மென்ட் கேட்டு கொடுக்கவில்லை. திராவிட மாடல் பெயரில் ஆட்சியை நடத்துகிறார். அவர் ஆட்சியை விமர்சிக்கும் இடத்தில் நான் இல்லை. அண்ணாமலை நான் இருக்கும் இடத்தில் (பாஜக) இருக்கிறார், அதனால் விமர்சிக்கிறேன். நான் முதல்வரை சந்தித்து சில கோப்புகளை கொடுக்க உள்ளேன்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலை: நான் சில விஷயங்களில் தலையிடுவதில்லை. யாராவது எஸ் வி சேகர் 3 லட்சம் ரூபாய் பணமாக கொடுத்து ஒரு பொருள் வாங்கிவிட்டாரே என கூறினார், நான் இல்லை சார் 19 ஆயிரம்தான் கொடுத்தேன். 2 லட்சம் எல்லாம் கேஷாக கொடுக்க முடியாது என ட்வீட் போடுவேன். யாரையும் நேரடியாக விமர்சித்து போட்டதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் பிராமணர்களை கேட்டால்தான் அவர்களது கஷ்டம் புரியும். ஒரு வேளை பிராமணர்களால் தொடங்க போகும் கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் பாஜகவிலிருந்து விலகுவேன்.
தம்பி வழியில் அண்ணா: பிராமணர்களுக்கான கட்சியை தொடங்கி வாக்குகளை பிரிக்கலாமே. கிட்டத்தட்ட சீமான் போல் செயல்படலாம். தம்பி வழியில் அண்ணன் (நான்). கட்சிக்கு கொள்கை இருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் எல்லாரையும் சமமாக கருத வேண்டும். மேட்டையும் பள்ளத்தையும் சமமாக்குவதுதான் சமூகநீதி. ஆனால் மேட்டை பள்ளமாக்கிவிட்டு, பள்ளத்தை மேடாக்கி காட்டுவேன் என்றால் அது சமூகநீதியே இல்லை. 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடியே மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வருவார். ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி யார் பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் மோடிதான் பிரதமராவார். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications