யுபிஐ வழியாக பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி.. ஆகஸ்டில் வரப்போகுதாம்.. நிம்மதி கொடுத்த புதிய அப்டேட்
சென்னை: பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க விரும்பும் சந்தாதாரர்கள் இனி யுபிஐ வழியாகவே பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், 2026 ஆம் நிதி ஆண்டு தொடக்கத்தில் இந்த வசதி கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பிஎஃப் பணத்தை யுபிஐ வழியாக எடுக்கும் வசதி வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளனர். தாமத்திற்கான காரணங்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது சந்தாதாரர்கள் பணத்தை தங்கள் வைப்பு நிதியில் இருந்து எளிதாக திரும்பப் பெறும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை இனி எளிதாக யுபிஐ வழியாகவே எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என்று தெரிவித்து இருந்தது.

யுபிஐ மூலம் பணம் எடுக்கலாம்
பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க விரும்பும் சந்தாதாரர்கள் இதற்கு முன்பாக அப்ளை செய்துவிட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால், யுபிஐ வழியாக எடுக்க முடியும் என்றால் விரைவாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் வருங்கால வைப்பு நிதி பயனர்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. 2026 ஆம் நிதி ஆண்டு தொடக்கத்தில் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து தாமதம் ஆனது.
வரும் ஆகஸ்டு மாதத்திற்குள்
இந்த சூழலில்தான், இது தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, அடுத்த மாதத்திற்குள் (ஆகஸ்டு) யுபிஐ வழியாக பிஎஃப் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:-
வருங்கால வைப்பு நிதியில் இருந்து யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி பீம் செயலி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை வங்கி கணக்குடன் இணைத்து, அவசர தேவைகளுக்கான பணத்தை தகுதியான காரணங்களுடன் விண்ணப்பித்து பெற முடியும். ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதத்திற்கு காரணம் என்ன?
இபிஎஃப்ஓ ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய சேவைகளை (CITES 2.01) அறிமுகம் செய்தது. இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சந்தாதாரர்கள் புகார் தெரிவித்தனர். அதாவது பழைய இபிஎஃப் கணக்கில் இருந்த தரவுகள் பலவும் புதிய அப்டேட் செய்ய தளத்தில் இல்லை என்றும், லாக் இன் செய்வதில் கோளாறு, மெதுவாக இயங்குதல், பணம் உரிமை கோரலில் அதீத தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக புகார் கூறினர்.
இதையடுத்து இந்த பிரச்சினைகளை தீர்க்க முழு வீச்சில் இபிஎஃப்ஓ ஈடுபட்டது. புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை சீர் செய்வதற்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த பிரச்சினைகள் சீர் செய்யப்படும் எனவும் அதன்பிறகு யுபிஐ-யுடன் இணைந்த பரிவர்த்தனை வசதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் விவரமறிந்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
