தி.நகரே செமயா மாறிடும்.. திட்டமிட்டதற்கு முன்பே ரெடியாகும் மேம்பாலம்?.. எந்த இடத்தில் தெரியுமா?
சென்னை: தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் அமைக்கப்படும் 1,200 மீட்டர் புதிய மேம்பால பணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை திட்டமிட்டதற்கு முன்பே முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக தி.நகர் விளங்குகிறது. வணிக நிறுவனங்கள் பெரும்பாலானவை தி.நகரில்தான் உள்ளன. இதனால், தி.நகரில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். சாதாரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலேயே தி.நகர் வணிக வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதுவும் பண்டிகை காலங்கள் நெருங்கிவிட்டால் சொல்லவே வேண்டாம்.

துணிகள் எடுக்கவும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கவும் தி.நகரை நோக்கி மக்கள் கூட்டம் அலைமோதும். சாரைசாரையாக எங்கு பார்த்தாலும் தி. நகரில் மக்கள் கூட்டமாகத்தான் பண்டிகை நெருங்கும் நாட்களில் காணப்படும். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இதனால் தி. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
புதிய மேம்பாலம்: அந்த வகையில், சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை சி.ஐ.டி. நகர் 1-வது மெயின்ரோடு மற்றும் சி.ஐ.டி. நகர் 4-வது மெயின் ரோடு வரை ரூ.131 கோடி செலவில் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த புதிய மேம்பாலம் 1200 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. அதாவது 1.2 கி.மீட்டர் தூரத்திற்கு அமைகிறது. 8.40 மீ அகலத்தில் அமைக்கப்படுகிறது இந்த மேம்பாலம்.
இந்த மேம்பால பணிக்கு கட்டுமான பணிகளில் புதிய முறையை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி இருக்கிறது. இதில், பாலத்துக்கான தூண்களை இரும்பை கொண்டு அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது.
திட்டமிட்டதற்கு முன்பாகவே: இந்த மேம்பாலம் அமைத்தால் தி நகரில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும். மேம்பால பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பணிகளை அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தான், அதற்கு முன்னதாகவே முடித்திடும் வகையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளை ஆணையர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதே வேகத்தில் பணிகள் நடைபெற வேண்டும் என்றும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதன்படி, இந்த மேம்பால பணிகள் திட்டமிட்டதற்கு முன்பாகவே அதாவது அடுத்த ஆண்டு செப்டம்பருக்கு முன்பாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என்பதால் வாகன ஓட்டிகளும் பாலம் விரைவில் திறக்கப்பட வேண்டும் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications