விஜய் வந்த காருக்கு அபராதம் பெண்டிங்.. காலைச் சுற்றும் கார் பஞ்சாயத்துகள்! இன்னும் தீரல!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று சென்னை பனையூரில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவிற்கு இன்று தவெக தலைவர் விஜய் பயணித்த வந்த டொயோட்டா இனோவா கிரிஸ்டா காருக்கு ரூ.4,500 அபராத தொகை கட்டப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே, அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி திடீரென 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், இந்திய தேர்தல் ஆணையத்தில் அன்றே கட்சியை பதிவு செய்தார்.

விஜய் கட்சிக் கொடி அறிமுகம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. பல லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்புடன் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகப்படுத்தி, கொடியேற்றி வைத்தார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மாஸ் காட்டிய விஜய்: பின்னர் பேசிய விஜய், இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி போல, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. விரைவில், நம்முடைய கொள்கைகள், செயல் திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரை மகிழ்ச்சியாக, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம் எனக் கூறியுள்ளார்.
விஜய் வருகை தந்த கார்: இந்நிலையில், தவெக தலைவர் விஜய், இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி அறிமுக விழாவிற்கு வருகை தந்த கார் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் பயணித்து இன்று பனையூருக்கு வந்த TN 37 DR 1111 என்ற பதிவு எண் கொண்ட டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார், கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
அபராதம் நிலுவை: விஜய் வந்த இந்த காருக்கு ரூ.4,500 அபராத தொகை நிலுவையில் உள்ள து. இந்த கார் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட நிலையில், மொத்தமாக ரூ.4,700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கடைசியாக விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.200 மட்டுமே செலுத்தப்பட்டு உள்ள நிலையில், ரூ.4,500 அபராத தொகை நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
விஜய் கார் சர்ச்சைகள்: ஏற்கனவே விஜய்யின் கார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2022 நவம்பரில், அதாவது அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் விஜய். அப்போது அவர் வந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது. விஜய் காரில் வந்த வீடியோவை சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு டேக் செய்து அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர், நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ.500 அபராதம் விதித்தனர்.
விஜய்க்கு அபராதம்: அதேபோல, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது, போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சிக்னலை மதிக்காமல் சென்றதால், விஜய்யின் வாகனம் போக்குவரத்து விதிகளை மீறியதாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக, 2005-ல் நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வரி செலுத்த உத்தரவிட்ட நிலையில் அபராதத்துடன் வரி செலுத்தினார் விஜய்.












Click it and Unblock the Notifications