மீன்கள் இனப்பெருக்கம்...மீனவர்களுக்கு 61 நாட்கள் தடைக்காலத்தால் ரெஸ்ட் - மீன்கள் விலை உயர வாய்ப்பு
மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கன் வழங்கப்படமாட்டாது.
சென்னை: மீன்பிடி தடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து ராமேஸ்வரம், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக இருந்து வந்தது. இந்த தடை கால சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியா குமரி வரை தமிழக விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 14ஆம்தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டின் தடை காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது.

ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரத்தில் மட்டும் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. தடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து ராமேஸ்வரம், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

படகுகளை சரி செய்யும் பணி
தடைகாலம் தொடங்கியதால் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் படகுகளில் இருந்து மீன் பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், கயிறு உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை டிராக்டர், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏற்றி வீடுகளுக்கு கொண்டுசென்றனர். சில மீனவர்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டுப்படகில் மீன் பிடிக்கலாம்
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது மீன் பிடி தடை காலம் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கன் வழங்கப்படமாட்டாது. என்ஜின் பொருத்தப்படாத பாரம்பரிய படகுகள் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்கத் தடை இல்லை நாட்டுப்படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயம் அடையாள அட்டையுடன் செல்லவேண்டும் என்று அவர் கூறினார்.

மீன்கள் விலை உயரும்
கேரளாவில் தடைகாலம் இல்லாததால் சிலர் அங்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லலாம் என்பதால் அதில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியதை அடுத்து மீன்கள் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications