Flash Back: 1999-ல் பாஜக- திமுக கூட்டணி எப்படி உருவானது? 4 ஆண்டுகால தேனிலவு 'கசந்தது' ஏன்? - பகுதி 1
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் அனல் பறக்கும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கிறது ஆளும் திமுக அரசின் அடுத்தடுத்த நகர்வுகள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு அமைத்த சிலை திறப்பு விழாவுக்கு முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டார்; கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து சென்றார். இதனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் மறைமுக கூட்டணி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்க திமுக தரப்போ இடைவிடாமல் பதில் கொடுத்தும் வருகிறது.
1989-ல் காங்கிரஸுக்கு எதிராக விபி சிங் தலைமையில் தேசிய முன்னணி என்ற மாநில கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணி உருவானது. அப்போது பலம் வாய்ந்ததாக இருந்த விபி சிங்கின் ஜனதா தளம், என்டி ராமராவின் தெலுங்குதேசம், தமிழ்நாட்டின் கருணாநிதி தலைமையிலான திமுக, அஸ்ஸாம் கன பரிஷத் என ஜாம்பவான் கட்சிகள் கட்டி எழுப்பிய முன்னணிதான் தேசிய முன்னணி. 1989 தேர்தலில் தேசிய முன்னணி, மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைத்தது. அப்போது வலதுசாரிகளான பாஜகவும் இடதுசாரிகள் கட்சிகளும் ஒரு சேர விபி சிங் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தன. அன்றைக்கு காங்கிரஸுக்கு எதிராக பாஜக, இடதுசாரிகளை உள்ளடக்கிய அத்தனை எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்றன. ஆனால் இந்த ஆட்சி நீடிக்கவில்லை என்பது தனிக்கதை. அன்றைக்கு பாஜகவுடனான இத்தகைய உறவு பெரும் விமர்சனத்துக்கும் உள்ளாகவில்லை. ஏனெனில் பாஜக அப்போதுதான் வேர்பிடித்துக் கொண்டிருந்தது.

1996-ம் ஆண்டு தேர்தல் களம்: இனி 1996-ம் ஆண்டு களத்துக்கு செல்வோம். 1991-96-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர் மறைந்த ஜெயலலிதா. அவரது 5 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக பெரும் அதிருப்தி அலை வீசியது. இந்த அதிருப்தி அலை 1996-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர கை கொடுத்தது. 1996 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது. எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். ஆனால் லோக்சபாவில் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தர ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்தது. இந்த ஐக்கிய முன்னணியில் ஜனதா தளம், திமுக, தமாகா உள்ளிட்டவை இடம் பெற்றன. ஆனாலும் இந்த ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கவில்லை. 1998-ல் குஜ்ரால் பிரதமராக இருந்த போது ஐக்கிய முன்னணி அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற ஆட்சி கவிழ்ந்தது. நாடு அப்போது மீண்டும் பொதுத் தேர்தலை எதிர்கொண்டது.
1998 லோக்சபா தேர்தல் அதிமுக- பாஜக: 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் முறையாக பாஜகவுடன் அண்ணா திமுக அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 30 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதனால் நாட்டின் பிரதமராக அண்ணா திமுக ஆதரவுடன் 2- வது முறையாக வாஜ்பாய் பொறுப்பேற்றார்.
அதிமுகவின் நெருக்கடியில் வாஜ்பாய்: 1998-ல் மத்தியில் அதிமுக ஆதரவுடன் பிரதமராக வாஜ்பாய்.. தமிழ்நாட்டிலோ திமுக ஆட்சி. இந்த கால கட்டத்தில் தமக்கு எதிரான வருமான வரித்துறை வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்; தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, பிரதமர் வாஜ்பாய்க்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அத்துடன் மத்திய அரசு எந்த ஒரு முடிவை எடுக்க வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா வாசலில் மத்திய அமைச்சர்கள் காத்துக் கிடக்க வேண்டிய நிலைமைதான் இருந்து வந்தது. இதனால் அதிமுக- பாஜக உறவு கசந்தது.
பாஜக ஆட்சிக் கவிழ்ப்பில் அதிமுக: 1999-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியுடன் திடீரென ஜெயலலிதா கை கோர்த்தார். ஜனதா கட்சியை நடத்திக் கொண்டிருந்த சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாட்டில் நடந்த டீ பார்ட்டியில் சோனியா, ஜெயலலிதா பங்கேற்றனர். இதனையடுத்து பாஜகவுக்கான ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
நட்புக் கரம் நீட்டிய திமுக: 1999-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது வாஜ்பாய் ஆட்சிக்கு திமுக ஆதரவு தந்தது. 1999-ம் ஆண்டு ஏப்ரல் 15 -ந் தேதி லோக்சபாவில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாஜ்பாய் முன்மொழிந்த போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறன், அண்ணா திமுக ஆதரவோடு நடைபெறும் ஆட்சி தமிழ்நாட்டின் நலனுக்கும், தேசத்தின் நலனுக்கும் எதிரானது. எனவே வாஜ்பாய் அரசு தொடர்வதை நாங்கள் ஆதரிக்கிறோம் என கூறி பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இங்கிருந்துதான் 'மதவாத' 'தீண்டத்தகாத' 'பண்டாரங்கள்' கட்சியான பாஜகவுடன் 'திராவிட சித்தாந்த' திமுகவின் 'முதல்' கூட்டணி அத்தியாயம் தொடங்கியது.
(அடுத்த பகுதி நாளை இடம் பெறும்)












Click it and Unblock the Notifications