நான் ஆணையிட்டால் டூ பாட்ஷா வரை.. எம்ஜிஆரின் மனசாட்சி ஆர்எம்வீ, ஜெயலலிதா இடையே என்னதான் மோதல்?
சென்னை: மறைந்த முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டின் பெரும் அரசியல் பிரளயங்களுடன் பின்னி பிணைந்தே இருக்கிறது.
எம்ஜிஆரின் வலது கரம் எம்ஜிஆரின் மனசாட்சி என்றெல்லாம் கொண்டாடப்பட்ட முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் பின்னர் எம்ஜிஆர் தொடங்கிய சினிமா நிறுவனங்களுக்கு மேலாளராக, பொறுப்பாளராக இருந்தார். எம்ஜிஆர் நடித்த, தயாரித்த அனைத்து படங்களின் முழு பொறுப்பும் ஆர்.எம்.வீ.தான்.

நான் ஆணையிட்டால்: எம்ஜிஆருடன் நடித்த கதாநாயகிகளில் ஜெயலலிதாவின் போக்கை ஆர்.எம்.வீ. தொடக்கம் முதலே விரும்பவில்லை. நான் ஆணையிட்டால் திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவிதான் கதாநாயகி என முடிவாகி இருந்தது. அப்போது திடீரென ஜெயலலிதா நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போராடி 18,19 வயதே ஆன ஜெயலலிதாவை அப்படத்தில் இருந்து நீக்கினார் ஆர்.எம்.வீரப்பன். காவல்காரன் திரைப்படத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆருக்கு நாயகியாக்க முயற்சித்தார் ஆர்.எம்.வீ. ஆனால் எம்ஜிஆரோ சரோஜாதேவி நடிக்கட்டும் என்றார். எத்தனையோ திருப்பங்களுடன் ஜெயலலிதாவும் நடித்து வெற்றி பெற்றது அத்திரைப்படம்.
ரிக்ஷாக்காரன்: ஒரு கட்டத்தில் எம்ஜிஆரிடம் யார் நெருக்கமாக இருப்பது? ஜெயலலிதாவா? வீரப்பனா? என்கிற யுத்தம் நிகழ்ந்தது. எம்ஜிஆர்- வீரப்பன் இடையே மோதல் ஒன்று உருவாவதை ஜெயலலிதா விரும்பினாராம். எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு பின்னரே வெளியானது. இதிலும் ஆர்.எம்.வீ.- ஜெயலலிதா மோதல்தான் பின்னணியில் இருந்தது. இதற்கிடையே அடிமைப் பெண் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து எம்ஜிஆருடன் தாமே நெருக்கம் என பிரகடனப்படுத்தினார் ஜெயலலிதா.
உலகம் சுற்றும் வாலிபன்: இந்த சூழலில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சில காட்சிகளை படமாக்குவதற்கு ஜப்பான் செல்ல முடிவானது திரைப்படக் குழு. அப்போது ஊடகங்கள், ஜப்பானில் நடிகையுடன் உல்லாசமாக இருக்கப் போகிறார் எம்ஜிஆர் என எழுதின. ஊடகங்கள் அப்போது குறிப்பிட்டது ஜெயலலிதாவைத்தான். இதனால் கொந்தளித்த ஆர்எம்வீ, ஜெயலலிதாவை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என எம்ஜிஆரிடம் வாதிட்டார். இந்த தர்க்கமும் அக்கப்போரும் அப்போது ஜெயலலிதா அறிந்ததுதான். இப்படி சினிமாவிலேயே ஜெயலலிதாவை வேண்டா வெறுப்பாகப் பார்த்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
உச்சத்தில் இருந்த ஆர்.எம்.வீ: எம்ஜிஆர், அண்ணா திமுக தொடங்கிய போது ஜெயலலிதா இல்லை. 10 ஆண்டுகள் கழித்துதான் ஜெயலலிதாவை அண்ணா திமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டு வந்தார். என்னதான் நம்பர் 2 இடத்தில் நெடுஞ்செழியன் இருந்தாலும் ஆர்.எம்.வீ.யைத்தான் நம்பினார் எம்ஜிஆர். அந்த கால கட்டத்தில் எம்ஜிஆரின் மனசாட்சி, வலது கரம் என அரசியலில் கொடி கட்டி உச்சத்தில் பறந்தவர் ஆர்.எம்.வீ. அப்படியான நிலையில்தான் ஜெயலலிதாவின் அரசியல் வருகையையும் ஆர்.எம்.வீரப்பன் சுத்தமாகவே விரும்பவில்லை.
எம்ஜிஆருடன் ஆர்.எம்.வீ. மோதல்: இதனால் எம்ஜிஆர்- ஆர்.எம்.வீரப்பன் இடையேயான மோதலும் அதிகரித்தது. அண்ணா திமுகவில் ஜெயலலிதாவின் ரோல் வெகுவேகமாக உயரவும் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆர்.எம்.வீ.யிடம் ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டு அமைச்சரவையில் இருந்து தூக்கி அடிக்கவும் செய்தார் எம்ஜிஆர். ஓராண்டு காலம் கழித்தே தாம் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஆர்.எம்.வீ.யை மீண்டும் சேர்த்துக் கொண்டார் எம்ஜிஆர். இந்த இடைவெளி காலத்தில் அதிமுகவின் அடுத்த தலைவராகவே உருவெடுத்தே விட்டார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்: 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த போது அதிமுகவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஜானகி அம்மையாரை முதல்வராக்கினார் ஆர்.எம்.வீ. இதனால் அண்ணா திமுகவே பிளவுபட்டு ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் உருவானது. பின்னர் அண்ணா திமுக ஒருங்கிணைக்கப்பட்டு ஆர்.எம்.வீ.யை தமது தலைமையிலான அமைச்சரவையிலும் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
பாட்ஷா : 1995-ல் பாட்ஷா திரைப்பட வெள்ளி விழாவில், மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் உருவாகிவிட்டது என பகிரங்கமாக ஜெயலலிதா ஆட்சியை விம்ர்சித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதற்கு எந்த வித எதிர்வினையும் தெரிவிக்காமல் அதே மேடையில் மவுனியாக இருந்தார் ஆர்.எம்.வீ. இதனால் ஆர்.எம்.வீ.யை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்; அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்தார். பின்னர் அதிமுகவை விட்டே வெளியேற்றினார். பின்னர்தான் எம்ஜிஆர் கழகம் எனும் தனிக்கட்சியை ஆர்.எம்.வீ தொடங்கி மறையும் வரை அதன் தலைவராகவே இருந்தார்!












Click it and Unblock the Notifications