கலெக்டர்கள் மாநாடு முடிவில் ‘சூப்பர்’ அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.. மாணவர்களுக்கு ஜாலி!
சென்னை: அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உணவுக்காக வழங்கும் தொகை ரூ.1000லிருந்து ரூ.1400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அப்போது, பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

அதன்படி, அரசு பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் பள்ளி மாணவர்களுக்கு உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூ.1,000லிருந்து இனி ரூபாய் 1,400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக்காக வழங்கப்படும் தொகை ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை அறிவித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இதன் மூலமாக 1,71,884 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு 68 கோடியே 77 லட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்ப்படும். இது கல்விக்காக செய்யும் முதலீடு என்று கருதியே இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விசாரணைக் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் அதனைக் களைய உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று வீடியோ கான்பரன்சிங் முறையினை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிறபடுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து சீரமைக்க சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்பு சாலை பணிகளை துரிதப்படுத்த தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications