இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள்.. அதிமுக தலைவர்கள் மரியாதை
இன்று ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.. இன்று அவரது திருவுருவ சிலைக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்..
இன்று காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

விழா மலர்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இருவரும் அதிமுகவின் கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்புகளையும் வழங்க உள்ளனர்... அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை இணைந்து வெளியிடுகின்றனர். இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்...

தொண்டர்கள்
அதேபோல, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக தொண்டரகள் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட துவங்கி உள்ளனர்.. தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு. மா.சுப்ரமணியன் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா
அதேபோல, அமமுக சார்பிலும் டிடிவி தினகரன் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.. சசிகலாவை பொறுத்தவரை இன்றைய தினம் சென்னை ராமாவரம் எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கும் காதுகேளாத வாய்ப்பேச முடியாத பள்ளிக்குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கி, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அமமுக, அதிமுக
அதேசமயம், ஏதாவது முக்கிய அறிவிப்பை இங்கிருந்து சசிகலா வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. பிப்ரவரி 24-ம் தேதி என்றாலே அதிமுக மேலிடத்தின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டதுபோல ஆகிவிடும் சூழலில், சசிகலாவின் அதிரடி வருகை மேலும் கலக்கத்தை தந்து வருவதாகவும் தெரிகிறது.. இதனால் அதிமுக, அமமுக தரப்பில் ஒருவித பரபரப்பும் எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications